லோக்சபா தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு சார்பில், நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, வரும், 8ம் தேதி, தமிழக அரசு சார்பில், 2019 - 20ம் ஆண்டுக்கான பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, அன்று காலை, 10:00 மணிக்கு, தமிழக சட்டசபை கூட்டம் துவங்குகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், பட்ஜெட்டை

தாக்கல் செய்கிறார். இதற்கான அறிவிப்பை, சட்டசபை செயலர், சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், நிதித்துறையை கவனித்து வருகிறார். எட்டாவது முறையாக, அவர், 8ம் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.கடந்த பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 17 ஆயிரத்து, 490 கோடி, நிதி பற்றாக்குறை, 44 ஆயிரத்து, 480 கோடி ரூபாயாக இருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்று,

எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், லோக்சபா தேர்தல் வர உள்ளதால், மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது. 

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூடி, பட்ஜெட் மீதான விவாதத்தை, எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, முடிவு செய்யும்.