சென்னை, ''தமிழகத்தில் நடப்பாண்டு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை'' என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிக்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.இதை பின்பற்றி பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை தடையின்றி அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்பட்டனர்.இந்நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் பொதுவான ஒரு ஆண்டு தேர்வாவது நடத்த வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் மசோதா நிறைவேற்றியது. அரசாணையையும் வெளியிட்டது.இதன்படி 'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுவான ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம். இது குறித்து மாநில அரசுகள் விருப்பத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கலாம்' என அரசாணையில் கூறப்பட்டது.இதை பின்பற்றி தமிழகத்திலும் நடப்பாண்டு பொதுத் தேர்வு முறை அமலுக்கு வருவதாக தகவல்கள் பரவின.இது குறித்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோட்டில் அளித்த பேட்டி:தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதை பலரும் தவறாக புரிந்து வைத்துள்ளனர். நடப்பாண்டில் தேர்வு நடத்தப்படவில்லை.வரும் ஆண்டில் நடத்துவது குறித்து அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி அதன்பின் முறையாக அறிவிக்கப்படும். இந்தாண்டு ஐந்து எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை. பெற்றோர் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.சி.பி.எஸ்.இ.யிலும் இல்லைஇதற்கிடையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்த தேர்வு உண்டா என மாணவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால் சி.பி.எஸ்.இ. அவசர முடிவு எதையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இது குறித்து மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கூறியதாவது:நடப்பு கல்வி ஆண்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வை நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மத்திய அரசின் புதிய சட்டத்தை சி.பி.எஸ்.இ. இன்னும் ஆய்வு செய்யவில்லை. இது குறித்து அடுத்த கல்வி ஆண்டில் உரிய முடிவு வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.