கோபிசெட்டிப்பாளையம்: ''கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு, 'ரோபோ' மூலம் பாடம் கற்றுத் தரும் முறையை, பள்ளியில் கொண்டு வர, நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.அவரது பேட்டி:பள்ளிக்கல்வித் துறையில், புதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2,500 கோடி ரூபாயில், 24 மாதங்களுக்குள், 35 ஆயிரம் பள்ளிகளில், மாணவர்கள், விஞ்ஞான உலகத்தின் தொழில்நுட்பங்களை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும், 'ஆன்லைன்' மூலம் கற்றுத்தர, அமெரிக்கா, மலேஷிய நிறுவனங்கள் மூலம், அடுத்த மாதம் பணிகள் துவங்க உள்ளோம்.கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்காக, ரோபோ மூலம் பாடம் கற்றுத் தரும் முறையை, புதிதாக பள்ளியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச், 15க்குள் கல்விக்காக, தனியாக சேனலும், பிப்., இறுதிக்குள், ஸ்டுடியோவும் உருவாக்கப்படும்.இதன்மூலம், ஒரே இடத்தில் இருந்து, 500 பள்ளிகளுக்கு கல்வி போதிக்க முடியும்.'பயோ - மெட்ரிக்' வருகைப் பதிவேடு முறை, அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.'போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற கேள்விக்கு, 'இதுபோன்ற கேள்விக்கு நாங்கள் மவுனமாக இருப்பது தான் சரி' என, பதிலளித்து சென்றார்.