சென்னை, :'எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்தோர், தேர்வு மையங்களை, மார்ச், 12 வரை தேர்வு செய்யலாம்' என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மத்திய சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை மற்றும் உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 15 இடங்களில் செயல்படுகின்றன. இதில், எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை படிப்பில் சேர, எய்ம்ஸ் நடத்தும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டு எய்ம்ஸ் நுழைவு தேர்வு, மே, 25, 26ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதற்கான அடிப்படை தகவல், ஆன்லைன் பதிவு, ஜன., 3ல் முடிந்தது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டோர், தேர்வு எழுதும் மையத்தை, தேர்வு செய்ய வேண்டும். இதற்கான பதிவு, நேற்று துவங்கியது. மார்ச், 3 வரை பதிவுகளை மேற்கொள்ளலாம்.கடைசி நேர ஆன்லைன் பிரச்னையை தவிர்க்க, முன்கூட்டியே பதிவுகளை முடிக்குமாறு, எய்ம்ஸ் தேர்வு கமிட்டி தெரிவித்து உள்ளது. அதேபோல, விண்ணப்பதாரர்கள் பெற வேண்டிய, தனி குறியீட்டு எண்ணை, இதுவரை பெறாதவர்களுக்கும், கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் மார்ச், 12க்குள், தனி குறியீட்டு எண்ணை உருவாக்கி, பதிவை தொடரலாம்.இந்நிலையில், ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ள முடியாத வகையில், எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான இணையதளம், தொழில்நுட்ப சிக்கலால், அவ்வப்போது முடங்குவதாக, மாணவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.