தமிழகத்தில் நீட் தேர்வுக்காக மத்திய அரசு கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகளுடன் 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் அதனால் இனி ஒரு மாணவர் கூட வெளிமாநிலம் சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நெல்லை மேலப்பாளையத்தில் தனியார் பள்ளி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

 அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிக் கல்வித்துறையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் 16,000 மாணவர்கள் 413 மையங்களில் நீட்தேர்வுக்காக பயிற்சி பெற்று வருவதாகவும், இவர்களில் முதல் மதிப்பெண் எடுக்கும் 4,000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளுடன் 10 கல்லூரிகளில் 25 நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழகத்திலேயே அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக கூறினார்.

 மேலும் கடந்த ஆண்டு 212 மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் மத்திய அரசு கேட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்

. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார். எனவே ஒரு மாணவர் கூட வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்படாது எனக் கூறினார்.

 இதனை தொடர்ந்து பேசிய அவர், அடுத்த வாரத்திற்குள் 15 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு ஸ்மார்ட் மடிக்கணிணி வழங்க மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.