புதுக்கோட்டை,பிப்.19:  புதுடில்லி அறிவியல் தொழில்நுட்பத்துறை  மற்றும் சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
 புத்தாக்க அறிவியல் கண்காட்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டியும்,குத்துவிளக்கேற்றி வைத்தும்  தொடங்கி வைத்துப் பேசியதாவது: கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள மாணவர்களாகிய உங்களிடம் அறிவியல் தேடல் அதிகமாய் இருக்க வேண்டும்.அறிவியல் தேடல்கள் அதிகமாய் இருக்கும் பொழுது உங்களிடம் ஆய்வுகள் அதிகமாய் இருக்கும்.ஆய்வுகள் அதிகமாய் இருக்கும் பொழுது படைப்பாற்றல் திறன் அதிகமாகும்.படைப்பாற்றல் திறன் மாணவர்களிடம் அதிகமாகும் பொழுது கண்டுபிடிப்புகள் அதிகமாகும்.மாணவர்களின் கண்டுபிடிப்புகள் சமூகத்தை மேம்படுத்துவதாக  இருக்க வேண்டும்.அறிவியல் ஆய்வு என்பது நுணுக்கமாக இருக்க வேண்டும்.அறிவியல் கண்டுபிடிப்புகளின் போது முழுமையாக அறிந்து அதன் முடிவுகளை வெளியிட  வேண்டும்.அது சமூகத்திற்கும் உங்களுக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.உங்களுக்கு ஊக்கமளிக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர் இருப்பதால் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்.இங்கு கண்காட்சிக்கு படைப்புகளை கொண்டு வந்து கலந்து கொண்டதிலே பாதி வெற்றியை அடைந்து விட்டீர்கள்.இரண்டாவது வெற்றி என்பது காட்சிப்படுத்திய பொருட்களை நடுவர்கள் பார்வையிட்டு அதன்மூலம் பெறும்  வெற்றி ஆகும்.எனவே இங்கு மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

 கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சோமசுந்தரம் வரவேற்றுப் பேசினார்.

இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

2018- 19 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மொத்தம் 74 பள்ளிகளின் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அறிவியல் படைப்புகள் செய்ய  ரூ 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டிருந்தது.அதன்படி புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ,மாணவிகள் தங்களின் அறிவியல் திறமையை வெளிப்படுத்தி கண்காட்சிப் பொருள்களைத் தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.

இதில்  மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் கு.கணேசனின் சீசாவில் இருந்து மின்சாரம் தயாரித்தல் முதலிடத்தையும்,குருந்திராக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஷர்மியின் சூரிய ஆற்றல் கொண்டு நீர் பாய்ச்சுதல்,வாராப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சரவணனின்   கடலில் எண்ணெய் பரவுதலை தடுத்தல்  ஆகிய படைப்புகள் இரண்டாமிடத்தையும் ,கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி பெரியநாயகியின் வண்ணம் கண்டறிதல் கண்டுபிடிப்பும்,  காட்டு நாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அம்பிகாவின் சுற்றுப்புற தூய்மையாக்கி கண்டுபிடிப்பும் குருந்திராக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி கார்த்திகாவின்  விவசாயத்தில் பிளாஸ்மா பயன்பாடு ஆகிய மூன்று படைப்புகள் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி,மச்சுவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ரேணுகா,பெருங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சரண்யா,ஸ்ரீ பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தூங்கா கணேசன் ,வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஸ்ரீ,கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராஜ்குமார் ,கம்மங்காடு மாணவி யமுனா,கீரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஹரிசுதா ,ராக்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜனனி ஆகியோர் சிறப்பிடம் பிடித்தனர்.
முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் மற்றும் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.
முதல் மூன்று இடங்களை பிடித்த 6 படைப்புகள் மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சிக்கு தகுதி பெற்றன.
கண்காட்சியினை  திருச்சி அண்ணா அறிவியல் மையத்தின் இளநிலை உதவியாளர் ஆர்.செந்தில் முருகன்,தேசிய கண்டுபிடிப்பு நிறுவனத்தின  ஆராய்ச்சி உதவியாளர் கிரீஸ் மேத்யூ ஆகியோர் பார்வையிட்டனர்.போட்டியின் நடுவர்களாக மாவட்ட ஆசிரியர் கல்வி  மற்றும்  பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள்,உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் செயல்பட்டனர்.இந்த புத்தாக்க அறிவியல் கண்காட்சியில்  பள்ளித்துணை ஆய்வாளர்கள், தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்தார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ரெ.ஜீவானந்தம்,இரா.கபிலன் ஆகியோர் செய்திருந்தனர்.

கண்காட்சியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த மேலப்பட்டி மாணவன் கு.கணேசனை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.