'லோக்சபா தேர்தலில், 'பூத் சிலிப்'பை, அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது. அதை மட்டும் வைத்து, ஓட்டளிக்க முடியாது' என, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.அரசியல் கட்சிகள் சார்பில், 'பூத் சிலிப்' வழங்க தடை விதித்ததுடன், தேர்தல் கமிஷனே, அவற்றை வழங்கி வருகிறது. இது, வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கிறது. தேர்தல் கமிஷன் வழங்கிய, 'பூத் சிலிப்' ஓட்டு போட உதவும் ஆவணமாகவும் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பூத் சிலிப் பயன்படுத்தி, கடந்த தேர்தல்களில் ஓட்டளித்தனர்.ஆனால், 'நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், 'பூத் சிலிப்'பை, அடையாள அட்டையாக பயன்படுத்தக் கூடாது' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.வாக்காளர்களில், 99 சதவீதம் பேர், வாக்காளர் அடையாள அட்டை மற்றும், 'ஆதார்' அட்டை வைத்துள்ளனர்; அவற்றை காட்டி, ஓட்டுபோடலாம். மேலும், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய - மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் அடையாள அட்டை உட்பட, 11 ஆவணங்களை பயன்படுத்தியும் ஓட்டளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.