ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை பள்ளி கல்வி துறை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் கட்டாய தேர்ச்சி அடையும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால், எழுத, படிக்க தெரியாமல் எட்டாம் வகுப்பு வரை முன்னேறுகின்றனர். எனவே ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு வைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.அதன்படி சமீபத்தில் பள்ளி கல்வி துறை சார்பில், சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு இடையே நடந்த கூட்டத்தில், பொது தேர்வு வைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு வைப்பது எனவும், தேர்ச்சி, தோல்வியை தற்போது முடிவு செய்ய வேண்டாம். விடைத்தாள் திருத்தும் பணி வட்டார வளமையத்தில் மேற்கொள்ள வேண்டும். ஐந்து, எட்டாம் வகுப்புக்குரிய இறுதி தேர்வு வினாத்தாள்கள் மாவட்ட வாரியாக அச்சிட வேண்டாம். மாநில வாரியாக அனுப்பப்படும். 20 மாணவர்களுக்கு கீழ் இருந்தால், அவர்களை அருகில் உள்ள பள்ளியில் தேர்வெழுத முயற்சி மேற்கொள்ள வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் 10-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். தேர்வன்று இந்த மாணவர்களை அருகில் உள்ள மையங்களுக்கு அழைத்து செல்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. போதுமான அவகாசம் இல்லை, என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் எட்டாம் வகுப்புக்கு மட்டும் பொது தேர்வு முறையை அமல்படுத்தலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.