முப்பருவ கல்வி முறை ரத்து: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Image result for term

வேலூர்: தமிழகத்தில் கடந்த 2012-13ம் கல்வியாண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 1 முதல் 8ம் வகுப்புவரை முப்பருவ கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. இம்முறையில் தேர்ச்சி என்பது முழுமையான தொடர் மதிப்பீடு முறையில் மதிப்பெண் தயார் செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2013-14ம் கல்வியாண்டு 9ம் வகுப்புக்கும் இந்த கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையில் முழுமையான தொடர் மதிப்பீட்டில் 60 மதிப்பெண் பாடங்களுக்கு தேர்வு எழுதினால் போதும். 40 மதிப்பெண்கள் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள்அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறையில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பு வரும் மாணவர்கள் முழு பாடப்புத்தகங்களையும் படித்து 100 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வை எழுத வேண்டிய நிலையால் அவர்கள் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் பள்ளிக்கல்வித்துறையில் தெரிவித்தனர்.
இதையடுத்து 2019-20ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பில் முப்பருவ கல்விமுறையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட மத்திய அரசு, நாடு முழுவதும் தொடக்கக்கல்வியில் 5ம் வகுப்புக்கும், நடுநிலைக்கல்வியில் 8ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் ஏப்ரல் மாதம் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் தேர்வு பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. தற்போது மேற்கண்ட வகுப்புகளுக்கு முப்பருவ கல்வி முறை நடைமுறையில் இருப்பதால் ஒரு பருவத்தில் கேட்கப்படும் கேள்விகள் அடுத்த பருவ தேர்வில் கேட்கப்படுவதில்லை.
இந்த நிலையில் 2019-20ம் கல்வியாண்டில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் நிலையில் மூன்று பருவங்களுக்கான பாடங்களையும் மாணவர்கள் தேர்வுக்கு படிக்க வேண்டும். இவ்வாறு முப்பருவ கல்விமுறை 1 முதல் 9ம் வகுப்பு வரை தொடரும் நிலையில் அது 10ம் வகுப்பை எட்டவேயில்லை. இதனால் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் 9ம் வகுப்புக்கும், 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் அந்த வகுப்புகளுக்கும் முப்பருவ கல்வி முறையை ரத்து செய்து பழைய கல்விமுறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில் 1 முதல் 4ம் வகுப்பு வரையும், 6 மற்றும் 7ம் வகுப்புகளுக்கும் முப்பருவ முறை கல்வி தொடரும் என்பதால் பெரும் குழப்பம் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக பள்ளிக்கல்வியில் முப்பருவ கல்வி முறையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாகவும், அதன் முதல்கட்டமாக 5, 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு முப்பருவ கல்விமுறை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment