ஏழு ஆண்டுகளாக எந்தச் சலுகைகளும் இல்லை: கேள்விக்குறியாகும் பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்காலம்

ஏழு ஆண்டுகளாக எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படாத நிலையில் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி போன்ற பாடங்களைக் கற்பிக்க கடந்த 2012-ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்துக்கு மூன்று அரை நாள்கள் வீதம் மாதத்துக்கு 12 அரை நாள்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.
 இதையடுத்து வந்த ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசின் சார்பில் ஏற்கப்படாததால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேறு பணிகளுக்குச் சென்று விட்டனர். நிகழாண்டு நிலவரப்படி சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 5 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் ரூ.2,700 மட்டும் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.7,700 வழங்கப்படுகிறது.
 ஆண்டுதோறும் தமிழக நிதி நிலை அறிக்கையின்போது பகுதி நேர ஆசிரியர்களுக்காக ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு அறிவிப்பு கூட வெளியாகவில்லை.
 பிற மாநிலங்களில்... இது குறித்து தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது: ஆந்திர மாநிலத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14ஆயிரத்து 203 வழங்கப்படுவதோடு பெண் ஆசிரியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பும் தரப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியாக ரூ.2 லட்சம் தரப்படுகிறது. ஆனால் தமிழத்தில் மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. மேலும் பி.எஃப்., இஎஸ்ஐ, போனஸ் என எந்தவிதச் சலுகைகளும் இல்லை. வாரத்துக்கு மூன்று அரை நாள்கள் என்றாலும் பெரும்பாலும் அனைத்து நாள்களிலும் பணியாற்றி வருகிறோம். வழக்கமான பணிகளைத் தவிர்த்து பள்ளி தொடர்பான பல்வேறு பணிகளிலும் எங்களை ஈடுபடுத்துகின்றனர்.
 மிகவும் குறைவான ஊதியம்: அரசு வழங்கும் ரூ.7,700 தொகுப்பூதியத்தைக் கொண்டு அன்றாடத் தேவைகளில் 50 சதவீத அளவுக்குக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. வாடகை, குழந்தைகளின் கல்விச் செலவு அதிகரித்து வரும் நிலையில் இவற்றை எதிர்கொள்ள முடியாமல் பகுதி நேர ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். எனவே சமவேலை சமஊதியம் வழங்கினால் மட்டுமே எங்களது வாழ்வாதாரம் மேம்படும்.
 அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக அரசு கேட்கும் உரிய கல்வித்தகுதி உள்ள எங்களுக்கு முதல் கட்டமாக அனைத்து வேலைநாள்களிலும் முழுநேரப்பணி ஊதிய உயர்வுடன் வழங்க வேண்டும். தற்போது 11 மாதங்களுக்கு சுமார் ரூ.100 கோடி சம்பளமாக செலவாகிறது. சிறப்பாசிரியர்களாக நிரந்தரப்பணியில் அமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கினாலே போதுமானது என்றார்.
 பணி நிரந்தரம் சாத்தியமில்லை: இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியது: பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை. ஏற்கெனவே அறிவித்தபடி அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றனர்.

No comments:

Post a Comment