ஆச்சர்ய அரசுப்பள்ளி


வர்ணம் பூசப்பட்ட வகுப்பறைகள்,  வட்ட வட்ட மேஜைகள், அதைச்சுற்றி குட்டி நாற்காலிகள், குழந்தைகளின் கைவண்ணத்தில் ஓவியங்கள், இவற்றுக்கு மத்தியில் சுட்டிக் குழந்தைகளுக்கு கணினியில் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள். யோகா, அபாகஸ், கராத்தே, நடனம் என சிறப்பு பயிற்சிகள்.  மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பே,தங்கள் பிள்ளைகளுக்கு ‘அட்மிஷன்’ கேட்டு நச்சரிக்கும் பெற்றோர். இதெல்லாம் எந்த பிரபல தனியார் பள்ளியில் என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. இதெல்லாம் நடப்பது ஓர் அரசுப் பள்ளியில்.
‘மாணவர் சேர்க்கை குறைவால் அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன’ என்ற குரல்களுக்கு மத்தியில், அசத்திக் கொண்டிருக்கிறார்கள் கோவை  மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள். இதனால்,  1-ம் வகுப்பு   முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில்  95-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஓராண்டில் 140-ஆக அதிகரித்துள்ளது. இதில், தனியார் பள்ளிகளில் இருந்து மாறிவந்த 10 குழந்தைகளும் அடங்குவர்.
அப்படி என்ன மாயம் செய்தார்கள் ஆசிரியர்கள்? "மாணவர் சேர்க்கை குறைவதுதான் அரசுப்  பள்ளிகளுக்கு தற்போது சவாலான விஷயம். எங்கள் பள்ளியும் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டது. சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியரும், 7 ஆசிரியர்களும் ஒன்றுகூடி கடந்த டிசம்பர் 2017-ல் ஆலோசனை செய்தோம். குழந்தைகளின் அடிப்படைத்  தேவைகளில் முதலில் கவனம் செலுத்துவதென  தீர்மானித்தோம்.
பள்ளி இருக்கும் அடையாளமே தெரியாமல், எழுத்துகள் மங்கிய நிலையில் பள்ளியின் முன்பிருந்த வளைவுக்கு சொந்த செலவில் வர்ணம் பூசியதுதான் மாற்றத்தின் முதல்படி. பின்னர், சரிவர சீருடை இல்லாமல் இருந்த 75 குழந்தைகளுக்கு, தன்னார்வலர் மூலம் சீருடை துணியைப் பெற்று, சீருடைகளை தைத்துக்கொடுத்தோம். தையல்காரர் ஒருவர் இலவசமாக சீருடைகளை தைத்துக்கொடுத்தார். அடுத்து, புத்தகங்கள் கிழிந்து போவதைத்  தடுக்கவும், படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் புத்தகங்களை, கல்வியாண்டின் தொடகத்திலேயே கொடையாளர்கள் மூலம் ‘பைண்ட்’ செய்து கொடுத்தோம்.
காலை முதல் மாலை வரை பாடங்களை கவனிப்பதால் சலிப்புத் தட்டுவதை தவிர்க்க, பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பாட்டு, கதை என அவர்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுத்தத் தீர்மானித்து, 2018 ஜூன் முதல் அமல்படுத்தினோம். குழந்தைகள் அதில் அதிக ஈடுபாடு காட்டியதால் ஒரு மணிநேரம் போதவில்லை. எனவே, சனிக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த பெற்றோர் சம்மதத்துடன், மாநகராட்சியின் அனுமதி கோரினோம். அவர்கள், உடனடியாக அனுமதி வழங்கி எங்களை ஊக்குவித்தனர்.
தற்போது வாரந்தோறும் சனிக்கிழமைகளில்  பொம்மலாட்டம், பாரம்பரிய விளையாட்டுகள், ஆரிகாமி (காகித மடிப்பு கலை), கதை சொல்லல், கராத்தே, யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன. தனியார் உதவியுடன் இதற்கென சிறப்பு பயிற்சியாளர்களை நியமித்துள்ளோம். சுழற்சி அடிப்படையில் சனிக்கிழமைதோறும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகின்றனர். பயனை உணர்ந்த பெற்றோரும்,  மாணவர்களுடன் பள்ளிக்கு வருகின்றனர்” என்றார் மாற்றத்துக்கு வித்திட்ட ஆசிரியர்களில் ஒருவரான சக்திவேல்.
`படி’னு சொல்லறதே இல்ல...
“எனக்குப் பூர்வீகம் கேரளா. இங்க குடியேறி 22 வருஷமாச்சு. மகன் அசாருதீன் பக்கத்துல இருக்கற சிபிஎஸ்சி பள்ளியில படிச்சுட்டு இருந்தான். அங்க பணத்த கொட்டிப் படிக்க வச்சோம். ஒருகட்டத்துல கடன் வாங்கி படிக்கவைக்க வேண்டிய சூழல். அரசுப் பள்ளியில சேர்க்க தயக்கம். சுத்தி இருக்கறவங்க என்ன நினைப்பாங்கனு கவுரவப் பிரச்சினை வேற. இருந்தாலும், அரைமனசோட இந்தப் பள்ளியில மகன் அசாருதீனையும்(10), மகள் ஆஷிகாவையும்(7) சேர்த்தேன். சேர்த்த கொஞ்ச நாள்லையே குழந்தைங்ககிட்ட மாற்றத்த பாக்க முடிஞ்சுது. தனியார் பள்ளியில பணம் கட்டி படிக்க வெச்சப்போகூட என் மகன் இவ்வளவு ஆர்வமா படிச்சதில்ல. இப்பெல்லாம் நான் அவன `படி`னு சொல்லறதே இல்ல. தானா படிக்கறான். எப்ப சனிக்கிழம வரும்னு காத்திட்டு இருக்கோம். படிப்போட சேர்த்து,  குழந்தைங்க விருப்பப்படி பாட்டு, கதை, நடனம்னு அவங்க தனித்திறமையை இங்க வெளிக்கொண்டுவர்றாங்க. அதுதான் குழந்தைகளின் ஆர்வத்துக்கு காரணம்” என்று நெகிழ்ந்தார் மசக்காளிபாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த அப்பாஸ்.
புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், செயல்விளக்க முறையே குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிகிறது. இதற்காகவே, இப்பள்ளியில் உள்ள 8 வகுப்புகளிலும்,  தன்னார்வலர்களின் பங்களிப்புடன், இணையதள வசதியுடன் தனி கம்யூட்டர்கள் உள்ளன. இதன்மூலம், 1, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்களில் உள்ள `க்யூ ஆர் கோடு`  மூலம் வீடியோ வடிவில் பாடங்களை நடத்துகின்றனர். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு சிடி-க்கள் மூலம் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, பாடம் தொடர்பான வீடியோக்களை காண்பிக்கின்றனர். இதனால், மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பது குறைந்துபோனதாக கூறுகின்றனர் ஆசிரியர்கள்.
தேவையறிந்து செயல்பாடு
“இந்த  ஸ்கூல்ல குழந்தைகள சேக்கற பெரும்பாலான பெற்றோர், கூலி வேலைக்குப்  போறவங்க. குழந்தைகளோட அடிப்படைத்  தேவைகள பூர்த்தி செய்யறதே எங்களுக்கு கஷ்டம். இந்த நிலையில, ஒவ்வொரு குழந்தையோட தேவைகளையும் இங்க பாத்துபாத்து செய்யறாங்க. இப்ப உள்ளூர் மக்களும் உதவ முன்வந்திருக்காங்க. ஒண்ணாவது படிக்கறப்பவே என் பொண்ணு சுபிஷ்காஸ்ரீ, யோகா போட்டிகள்ல ஆர்வத்தோட கலந்துக்குறது பாக்கும்போது சந்தோஷமாக இருக்கு”என்றார் மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த காந்திமதி.
‘ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு’ என்பதை உணர்ந்து செயல்பட்டால்,  மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதற்கு இப்பள்ளி ஓர் உதாரணம்.

No comments:

Post a Comment