தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடங்கப்படவுள்ள கல்வி தொலைக்காட்சி சேனலுக்கான படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 24 மணி நேர கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும் இந்த புதிய சேனல் தொடங்கப்படவுள்ளது.
இதற்காக சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 8ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி தொலைக்காட்சி அரசு செட்டாப் பாக்ஸில் 200ஆவது சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறலைப் பற்றிய விளக்க உரையும், அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும். பின்னர் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், மாணவ,  மாணவிகளின் சாதனை, யோகா, உடற்பயிற்சி,  குறு நாடகங்கள், வாழ்வியல் உரைகள் பாடங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இவை தினமும் மூன்று முறை என 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும்.
 தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் கல்வி தொலைக்காட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு காட்சிப் பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவை சென்னை காட்சிப்பதிவு மையத்தில், ஒருங்கிணைக்கப்பட்டு, விரைவில் ஒளிபரப்பு தொடங்கவுள்ளது. இந்தத் தொலைக்காட்சி, தொடக்கப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கும்.
பள்ளிகளில் தொலைக்காட்சிகள்: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.