பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் தேர்வில் சில வினாக்கள் யோசித்து பதில் எழுதும் வகையில் அமைந்திருந்தது. இதனால் மெல்ல கற்கும் மாணவர்கள் வினாத்தாளை கடினமாக உணர்ந்தனர். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாள் தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுதிய மாணவர்கள் சில வினாக்கள் குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன என தெரிவித்தனர். எனினும் பொதுவாக சுலபமான வினாத்தாளாக இருந்தது என்றனர். வினாத்தாள் குறித்து தமிழ் ஆசிரியை சாரதா கூறியதாவது: பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.

வினாக்கள் பெரும்பாலும் சுலபமானதாகவே இருந்தன. சில வினாக்கள் புத்தகத்தில் உள்ளது போல் இல்லை. குறிப்பாக, “குகன் தோற்றம் எத்தகையது?” என புத்தகத்தில் வினா உள்ளது. ஆனால் வினாத்தாளில் இதே வினாவை வேறு வடிவில் கேட்டுள்ளனர். இது மெல்ல கற்கும் மாணவர்களை யோசிக்க வைத்துள்ளது. இதுபோல்  வினா எண் 1, 5 உள்ளிட்டவை யோசிக்கும் வினாக்களாக இருந்தன. இரண்டு இடங்களில் எழுத்துப்பிழையும் இருந்தன. ஆயினும் வினாக்கள் கடினமானதாக இல்லை என்றார்.