நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து முதன்முறையாக 10-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள 2 மாணவிகளுக்கு கலெக்டர் ஷில்பா பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் மாணவிகளை தனது காரில் ஏற்றி வலம் வந்து ஊக்கப்படுத்தினார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பூங்காநகரில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 22 நரிக்குறவர்களின் குழந்தைகள் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி உண்டு உறைவிட பள்ளியில் படிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் முதன் முறையாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாயத்தில் இருந்து 10-ம் வகுப்பு பொது தேர்வை 2 மாணவிகள் எழுத உள்ளனர்.


இதனை அறிந்த கலெக்டர் ஷில்பா அவர்கள் இருவரையும் பாராட்டும் விதமாக நரிக்குறவர் காலனிக்கு நேற்று நேரில் சென்றார். தேர்வு எழுத உள்ள மோகன் என்பவருடைய மகள் பார்வதி, கமால் மகள் மாதவி ஆகிய இரு மாணவிகளையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்.

நரிக்குறவர் சமுதாய காலனி மக்களிடம் சுமார் 2 மணி நேரம் கலெக்டர் ஷில்பா உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், உங்கள் சமுதாய குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வையுங்கள். அவர்கள் படித்து என்னைப் போல் உயர் பதவிக்கு வர வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து நரிக்குறவர் காலனியில் உடனடியாக அங்கன்வாடி அமைத்துக் கொடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். மேலும் வீடு இல்லாத நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அவர் வழங்கினார்.

பின்னர் பார்வதி, மாதவி ஆகிய இருவரையும் கலெக்டர் ஷில்பா தனது அரசு காரில் ஏற்றி வலம் வந்து ஊக்கப்படுத்தினார். இதனால் இரு மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நரிக்குறவ மாணவிகளை கலெக்டர் தனது காரில் ஏற்றி வலம் வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.