சென்னை:பிளஸ் 2 பொது தேர்வு கள், நேற்று துவங்கின. முதல் நாளில் நடந்த, தமிழ் பாடத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும், மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 7,082 பள்ளிகளில் படிக்கும், 8.61 லட்சம், மாணவ - மாணவியர், இத்தேர்வில் பங்கேற்றுஉள்ளனர். முதல் நாளில், தமிழ் உள்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது. காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 12:45 மணி வரை நடந்த தேர்வில், 15 நிமிடம், வினாத்தாள் வாசிக்கவும், சுயவிபரங்களை பதிவு செய்யவும், அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழ் பாடத் தேர்வில், சிரமமின்றி விடை அளிக்கும் வகையில், வினாக்கள் மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த ஆண்டு, புதிய தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இதுவரை, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, மொத்தம், 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. 

அந்த முறை மாற்றப்பட்டு, தற்போது, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.அதேபோல், வினாத்தாள் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முந்தைய ஆண்டுகளில், அதிக அளவில் இடம் பெற்ற, சரியான விடையை தேர்வு செய்யும் பிரிவு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், கோடிட்ட இடங்களை நிரப்பும் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

புதிய தேர்வு முறையால், பயத்தில் இருந்த மாணவர்கள், நேற்றைய வினாத்தாளை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகமானோர் தேர்ச்சி பெறும் வகையில், வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாக, கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து, சென்னையை சேர்ந்த, தனியார் பள்ளி தமிழாசிரியை, ஜெயலட்சுமி கூறுகையில், ''மாணவர்கள், பல முறை பயிற்சி எடுத்த வினாக்களே, அதிகம் இடம்பெற்றன. ''மூன்று கேள்விகள் மட்டும், மாணவர்கள் சிந்தித்து, விடை எழுதும் விதத்தில் இருந்தன. 

புதிய தேர்வு முறையில், எந்த குழப்பமும் இல்லை,'' என்றார்.நேற்றைய தேர்வின்போது, மாநிலம் முழுவதும், 4,000 பறக்கும் படையினர், தேர்வு மையங்களில் சோதனையிட்டனர்.