திண்டுக்கல்:'ஆங்கில தேர்விலும் அதிக மதிப்பெண் பெறலாம்' என பொதுத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்கள் கூறினர்.

இந்தாண்டு புதிய முறைப்படி ஒரே தாளாக 100 மதிப்பெண்களுக்கு ஆங்கிலத்தேர்வு நடத்தப்பட்டது. அகமதிப்பெண்கள் பத்து தவிர்த்து மீதம் உள்ள 90 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 
இது பற்றிய மாணவர்கள், ஆசிரியரின் கருத்துகள் வருமாறு: 
பிரியங்கா, எஸ்.எம்.பி.எம்., பள்ளி, திண்டுக்கல்

இத்தேர்வு இருபது ஒரு மதிப்பெண்கள், தலா ஏழு கேள்விகளுக்கு விடை எழுத வேண்டிய இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண் பகுதிகளை கொண்டது. எளிதாக இருக்கும் என்று எதிர்பார்த்த ஒரு மதிப்பெண் பகுதி மிகக்கடினமாக இருந்தது. பாடங்களின் உள்பகுதியில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கேள்விகள் இடம் பெற்றதால் சற்று திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்றபடி 2, 3, 5 மதிப்பெண் பகுதிகள் எளிதாகவே இருந்தன.
அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது
.பாலாஜி, அங்குவிலாஸ் பள்ளி,திண்டுக்கல்
ஆங்கிலத் தேர்வு என்பதால் கடினமாக இருக்கும் என்ற மனநிலையுடனே தேர்வறைக்குள் நுழைந்தேன். வினாத்தாளை படித்ததும் நிம்மதி அடைந்தேன். எதிர்பார்த்ததை விட எளிதாக இருந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு கேள்விக்கு மட்டும் விடை அளிக்க சிரமப்பட்டேன். இதில் அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறுவர். 
மிக அரிதாகவே தோல்வி இருக்கும்.
தனலட்சுமி, அருள்ஜோதி வள்ளலார் பள்ளி,திண்டுக்கல்
ஐந்து மதிப்பெண் பகுதியில் 46வது கேள்வி, இதுவரை எதிர்கொள்ளாத அளவு கடினமானது. அனைவரும் சிரமப்பட்டே பதில் அளித்திருப்பர். இத்தேர்வில் 50 முதல் 70 மதிப்பெண்கள் வரை பெறுவது எளிது. ஒரே தாளாக தேர்வு வைத்தது மாணவர்களின் மனஉளைச்சலை நீக்கியது.
செல்வமணிகண்டன், எஸ்.எம்.பி.எம்., பள்ளி,திண்டுக்கல் 
தமிழ்த் தேர்வில் இரு மதிப்பெண் வினாக்கள் சவாலாக இருந்தன. அதுபோன்றே ஆங்கில தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் ஐந்து கேள்விகள் கடினமாக இருந்தன. இப்பகுதியில் எனக்கு 19 மதிப்பெண்கள் கிடைக்கும் என நினைக்கிறேன். மற்றபடி அனைத்து பகுதிகளும் மிக எளிதாக இருந்தன. மொத்தத்தில் 95 மதிப்பெண்களை தொடுவது மிக எளிது. 
சதம் அடிப்பது கடினம்.
லாவண்யா, ஆங்கில ஆசிரியை,திண்டுக்கல்
ஆங்கிலத் தேர்வு எளிதாக இருந்தாலும், கேள்விகளில் சில குளறுபடிகளும் உள்ளன. ஒரு மதிப்பெண் பகுதியில் கேள்வி எண் 10 மாணவர்களை குழப்பும் விதமாக இருந்தது. மூன்று மதிப்பெண் பகுதியில் 40வது கேள்வி எண்ணில் ஐந்து மதிப்பெண் வினா இடம் பெற்று இருந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில் வினா எண்கள் 46, 47 கடினமாக இருந்தன. நிச்சயமாக இவை மாணவர்களுக்கு சவாலாக இருந்திருக்கும். நுாற்றுக்கு நுாறு கடினம். ஆனால் அனைவரும் நல்ல மதிப்பெண் பெறுவர்.