சென்னை:அரசு பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கு, ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அரசு பள்ளிகளில் பணியாற்றும், கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள். தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின் படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என, தமிழக பள்ளி கல்வி துறை, சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.

இதை பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று அறிவிக்கை வெளியிட்டது. இந்த பதவிக்கு, ஆன்லைன் வழி கணினி தேர்வு நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், வரும், 20ம் தேதி முதல், ஏப்., 10 வரை, டி.ஆர்.பி.,யின் இணைய தளத்தில், ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, http://trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.