சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

மதிப்பூதியத் தொகையாக ரூ.56.08 கோடியை விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அண்மையில் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

 தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி, மதிய உணவுத் திட்டப் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வாக்காளர் பட்டியலை வீடு வீடாகச் சென்று சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்தப் பணியைக் கண்காணிக்க துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 67 ஆயிரத்து 669 வாக்குச்சாவடி அலுவலர்களும், 6 ஆயிரத்து 414 கண்காணிப்பாளர்களும் உள்ளனர்.

 2018-2019-ஆம் ஆண்டில் 29 மாவட்டங்களிலும் பணியாற்றிய அவர்களுக்கு பயணப்படி மற்றும் மதிப்பூதியமாக மொத்தம் ரூ.56.08 கோடி அளிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலருக்கும் தலா ரூ.7 ஆயிரத்து 150-ம், கண்காணிப்பாளருக்கு தலா ரூ.12 ஆயிரமும் வழங்கப்பட வேண்டும்.

இந்தத் தொகையை, மத்திய மற்றும் மாநில அரசுகள் சரிபாதியாகப் பகிர்ந்து அளிக்கின்றன.

வரும் 31-ஆம் தேதிக்குள் இந்தத் தொகை அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், அது பிரச்னைக்குரியதாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு எச்சரித்துள்ளார்.