உச்சி வெயிலில் பொதுத்தேர்வா? பரிதவிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்


பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்றால் அது காலை நேரத்தில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 11- ம் வகுப்பு பொது தேர்வு நடப்பதால் பத்தாம் வகுப்புக்கான  பொது தேர்வில் சில தாள்கள் மதியமும் சில தேர்வுகள் காலையிலும் நடத்த உள்ளனர். இது மாணவர்களை அச்சப்பட வைத்துள்ளது.

இது குறித்து கல்வியாளர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சதீஷ்குமார் கூறியதாவது: ’’தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் நிறைய மாற்றங்கள் அணிவகுத்துக்கொண்டே தான் இருக்கின்றன. பல மாற்றங்கள் நன்மை தரத்தக்க வகையாக இருந்தாலும் கூட, சில மாற்றங்கள் பாதிப்பைத் தருவதாகவும் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள 10 ம் வகுப்பு பொதுத்தேர்வின் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் மதிய நேரத்தில் நடத்தப்படும் என அறிவித்திருப்பது மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்னவென்று கேட்டால் அதே நாட்களில் 11 -ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெறுவதால் இவ்வாறு நடத்தப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் நான்கு நாட்கள் தேர்வை வேறு நாட்களில் நடத்த திட்டமிட வேண்டுமே தவிர ஒரே நாளில் இரு வகையான தேர்வுகள் நடத்திட திட்டமிடுவதும், ஒரு தேர்வை  மதிய நேரத்தில் நடத்திட முடிவெடுப்பதும் தவறாகும்.

மாணவர்கள் புத்துணர்ச்சியோடு காலைப் பொழுதில் தேர்வறைக்குச் சென்று எழுதுவதற்கும், தற்பொழுது காய்ச்சி எடுக்கும் உச்சி வெயிலில் பயணம் செய்து, தேர்வறைக்குச் செல்வதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.

 மாணவர் மையக் கல்வி முறை எனச் சொல்கிறோம். தேர்வு மட்டும் அதிகார மையமாக இருக்கலாமா? அதுவும் மாணவர்களுக்கானதாகவே இருக்க வேண்டும். மாணவர்களின் நலனில் அக்கறைகொண்ட பள்ளிக்கல்வி அமைச்சர் நல்ல முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

No comments:

Post a Comment