லோக்சபா,தேர்தல்,தேதி அறிவிப்பு,தாமதம் ஏன்?

புதுடில்லி: 'லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க போதுமான அவகாசம் உள்ளது. தேர்தல் கமிஷன் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுவது ஆதாரமற்றது' என தலைமை தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா,தேர்தல்,தேதி அறிவிப்பு,தாமதம் ஏன்?


பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல்'பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் முடிவடைவதற்காக தேர்தல் கமிஷன் காத்திருக்கிறது. அது முடிந்ததும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்' என கூறியிருந்தார்.


மேலும் 'தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நலத்திட்டங்களை அரசு அறிவிக்க முடியாது. அதனால்தான் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் கமிஷன் வேண்டுமென்றே தாமதம் செய்கிறது' என பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: லோக்சபாவுக்கு 2014ல் நடந்த தேர்தலின் போது தேர்தல் நடைமுறைகளை முடிக்க மே 31 வரை அவகாசம் இருந்தது. அதனால் தேர்தல் தேதியை மார்ச் 5ல் அறிவித்தோம். இந்த முறை தேர்தல் நடைமுறைகளை முடிக்க ஜுன் 3 வரை அவகாசம் உள்ளது.

எனவே தேர்தல் தேதிகளை அறிவிக்க போதுமான அவகாசம் உள்ளது. இதில் வேண்டுமென்றே தாமதம் எதுவும் செய்யப்படவில்லை. அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

இதற்காக பல்வேறு மாநிலங்களிலும் அதிகாரிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபாவுக்கு 2014ல் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஏப். 7ல் முதல்கட்ட தேர்தலும் மே 12ல் கடைசி கட்ட தேர்தலும் நடந்தன. இந்த முறை ஏழு அல்லது எட்டு கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பு இந்தவார கடைசி அல்லது வரும் 12க்குள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.