சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் வேட்பு மனு தாக்கல்

தஞ்சாவூர்: சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை, எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கண்டு கொள்ளாததால், தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில், சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சாவூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கு, செல்வராஜ், 62, என்பவர், நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.இது குறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் வரதராஜன் கூறியதாவது: தமிழகத்தில், 2.5 லட்சம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எங்களை, அரசு ஊழியர்களாக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், எந்த ஒரு அரசியல் கட்சியும் எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. இந்த தேர்தலிலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அதனால், சத்துணவு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான செல்வராஜை, தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வேட்பாளராக்கி உள்ளோம்.தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும், மற்ற சட்டசபை தொகுதிகளில், சத்துணவு பணியாளர்கள் தேர்தலை புறக்கணிப்பது, எனவும் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment