பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா? வட்டார வாரியாக கணக்கெடுப்பு துவக்கம்

கோவை மாவட்ட 'சமக்ர சிக்சா' இயக்கத்தின் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு துவங்கியது.தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும், 6 முதல், 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நடந்து வரும் கணக்கெடுப்பில், செங்கல் சூளைகளில் பணியாற்றுவோர் குடும்பத்தில் உள்ள குழந்தைகள், அபார்ட்மென்ட் கட்டுமான பணியில் தங்கி பணியாற்றும் குடும்பங்களில் உள்ள குழந்தைகள்.தெருவோரம் வசிப்போரின் குழந்தைகள், உள்ளிட்டவர்களின் குழந்தைகள் யாராவது பள்ளிக்கு செல்லாமல் இருந்தால், அவர்களை கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் இருந்து இடையில் நின்ற குழந்தைகள் குறித்தும் கணக்கெடுத்து மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்கவும் கணக்கெடுப்பின் போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், ஒன்பது ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் மற்றும் துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிளாரன்ஸ் தலைமையில் பள்ளிக் கல்விக்குழு, மேலாண்மைக்குழு, சத்துணவு, அங்கன்வாடி திட்டப் பணியாளர்களின் உதவியுடன், 15 ஆசிரியப் பயிற்றுனர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment