"தமிழ் வழிக் கல்வி ஐ.ஏ.எஸ் ஆவதற்குத் தடையல்ல" நம்பிக்கை விதைக்கும் தமிழ் ஓவியா ஐ.ஏ.எஸ்

Image may contain: Devanath Deva
மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் பழனியைச் சேர்ந்த தமிழ் ஓவியா மற்றும் அலர்மேல்மங்கை என இரண்டு இளம் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருவரும் தங்களுக்கான விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்தது 'தமிழ்' என்பது சிறப்பிற்குரியது. அலர்மேல்மங்கை மருத்துவம் படித்து முடித்தவர். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு மருத்துவம் மட்டுமின்றி பல துறைகளிலும் உதவ வேண்டும் என்ற ஆர்வத்தில், மத்திய அரசு பணித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தேசிய அளவில் 408-வது இடம் பெற்றுள்ளார். தமிழ் ஓவியா தோட்டக் கலை பயின்றவர். இவர் தேசிய அளவில் 345-வது இடம் வகிக்கிறார். தமிழ் ஓவியாவுடனான கேள்விகளும், அவர் அளித்த உற்சாக பதில்களும்:

"உங்களைப் பற்றி சுருக்கமான அறிமுகம்?" "அப்பா சௌந்தரபாண்டியன். அரசு ஊழியராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். அம்மா முருகேஸ்வரி. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் .அண்ணன் தமிழ்வசந்தன். தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தங்கை தமிழ்இலக்கியா கொடைக்கானலில் பி.எட்., படித்து வருகிறார். பழனியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எனது கிராமம் கரிக்காரன் புதூர். நெய்க்காரப்பட்டி, ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தேன். பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றேன். அது என் கல்வி ஆர்வத்தினை இன்னும் தூண்டும்விதமாக இருந்தது. 2010 ஆம் ஆண்டு பெரியகுளம் தமிழ்நாடு தோட்டக்கலைக் கல்லூரியில் இளங்கலை தோட்டக்கலை படித்தேன். பின்னர் இரண்டு வருடம் கோவையில் மத்திய அரசுப் பணிகளுக்கான பயிற்சி மையத்தில் தங்கிப் படித்தேன். 2016 - ல் வங்கிப்பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று பழனியில் உள்ள கனரா வங்கியில் பணியாற்றினேன்.

வேலை பார்த்துக்கொண்டே, மேற்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. எனவே அந்தப் பணியை ராஜனாமா செய்தேன். மீண்டும் போட்டி தேர்வுகள் எழுதினேன். குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளியில் அலுவலக பணியில் சேர்ந்தேன். இப்போது தாராபுரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவி அலுவலராகப் பணியிட மாற்றம் பெற்றுப் பணியாற்றி வருகிறேன்." "ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற ஆசை எப்படி ஏற்பட்டது?" நான் தோட்டக்கலை இறுதி வருடம் படித்த போது போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனது எண்ணத்திற்கு குடும்பத்தார் ஊக்கம் சேர்த்தனர். எனவேதான் இது சாத்தியப்பட்டது. அதுவரை எனக்கு இதுபோன்ற தேர்வுகள் குறித்த அறிமுகம் வெகுவாகக் கிடைக்கவில்லை. இன்றும் கிராமப்புற மாணவர்களுக்கு யு.பி.எஸ்.சி தேர்வு குறித்த விழிப்பு உணர்வு மிகக்குறைவு என்பது உண்மையான நிலை."

"தமிழ்வழிக் கல்வி பயின்ற உங்களுக்கு ஐ.ஏ.எஸ் தேர்வு அனுபவம் எப்படி இருந்தது?" நான் தமிழ்வழிக் கல்வி பயின்றவள் மட்டுமல்ல கிராமத்தில் படித்த பெண்ணும்கூட. தமிழ்வழிக் கல்வி கற்ற மாணவர்களுக்கு மத்திய அரசுப் பணிகள் எட்டாக்கனியாக இருந்து வருகிறது என்பது பலரின் கருத்து. உண்மை என்னவென்றால் 'மொழி ஒரு தடையே இல்லை'. முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் போட்டி தேர்வுகளைத் தவிடுபொடி ஆக்கி விடலாம். நான் எனது தேர்விற்கான விருப்பப் பாடமாக தேர்வு செய்தது தமிழ்தான். ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, அதுவே அறிவு என்பது கிடையாது. ஆரம்பத்தில் எனக்கும் கடினமாகவே இருந்தது. ஆனால், போகப்போக எளிமையாகி விட்டது. தினமும் ஆங்கிலச் செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கினேன். ஒருமுறை செய்தித்தாளை முழுமையாக வாசித்து முடிக்க ஆரம்பத்தில் ஒரு நாள் முழுவதுமாக எடுத்துக்கொண்டேன். தொடர்ந்து வாசித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பு நேரம் குறைந்தது. தற்போது ஒரு மணி நேரத்தில் ஒரு செய்தித்தாள் முழுமையும் வாசிக்கும் திறன் வந்துவிட்டது. எனவே, தமிழ்வழிக் கல்வி கற்கும் மாணவர்களுக்கான எனது அறிவுரை, 'ஆங்கிலத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்' என்பதே! அத்துடன் ஐ.ஏ.எஸ் ஆவதற்கான தேர்வு, முழுமையும் கூட தமிழிலேயே எழுத முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சி போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டாம்."

"நீங்கள் தேர்வுக்காக, தினமும் எவ்வளவு நேரம் படித்தீர்கள்? "பயிற்சி மையத்தில் இருந்தபோது தினமும் 15 மணி நேரம் படித்தேன். வேலைக்குச் சென்ற பின், காலையில் இரண்டு முதல் மூன்று மணி நேரமும் இரவு மூன்று மணி நேரமும் படித்தேன்." "உங்கள் ரோல்மாடல் யார்?" "சகாயம் சார்தான். அவரது நேர்மையும் உழைப்பும் என்னை ரொம்பவே ஈர்த்தது. அவரைப் போல நேர்மையாகப் பணியாற்றவே விரும்புகிறேன்"

"உங்களது பணியில் எதற்கு முதலிடம் தருவீர்கள்?" "சாதாரண கிராமத்துப் பெண்ணான என்னை, இந்த நிலைக்கு உயர்த்தியது கல்வி ஒன்றே! எனவே, எனது முதல் நோக்கம் கல்வியை மேம்படுத்துவது. அடுத்தாகச் சுகாதாரத்தைப் பேணுவதும், பெண்களுக்கான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதும் ஆகும். தமிழ்நாட்டில் எனக்குப் பணி கிடைக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. வேறு மாநிலங்களில் கிடைக்கலாம். சொந்த மக்களுக்குச் சேவை செய்ய முடியாது என்ற வருத்தம் இருப்பினும், எங்குச் சென்றாலும் அங்கு இருப்பவருக்கு உதவ வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்திருக்கிறேன்." "ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இன்றைய சூழல் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் இருப்பதாக பொதுவாகச் சொல்லப்படுகிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? "எல்லாத் துறைகளிலும் இது போன்ற பிரச்னைகள் உண்டு. மக்களுக்காக மட்டுமே பணியாற்ற விரும்புகிறேன். நேர்மையான வழியை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன். அதிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன். தற்போதைய சூழலில் நேர்மையான அதிகாரிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்கும் உறுதியான மனதுடன்தான் இந்தத் துறையின் ஆழத்தை முடிந்தவரைக் கணித்து கால் பதிக்கிறேன்."

"ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் வரையறுப்பீர்கள்?" "'கலெக்டர் என்றால் பெரிய இடம் வகிப்பவர்.அவரை எளிதில் நெருங்க இயலாது! என்று எளிய மக்கள் நினைக்கிறார்கள். அப்படி இல்லாமல் அனைவரும் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும். நானும் அவ்வாறே இருக்க விரும்புகிறேன். என்னைப் போன்ற சக இளைஞர்களுக்கு நான் கூறுவது, 'திறமை இருக்கும் யார் வேண்டுமானாலும் கலெக்டர் ஆகலாம். துணிந்து படியுங்கள். உங்களுக்கான இலக்கு உயர்வானதாக இருக்கட்டும். எனக்கான இலக்கை நான் தீர்மானித்திருந்தேன். அதற்கான பயணத்தில் கிடைத்த சிறிய வெற்றிகளால் நான் நின்றுவிடவில்லை. அதே சமயம் தோல்வியால் துவண்டு விடவில்லை. நான்காவது முறையாகத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். எனவே விடா முயற்சியுடன் செயல் படுங்கள்! வெற்றி உங்களுக்கானது!

No comments:

Post a Comment