வங்கி ஊழியர், அரசு ஊழியர் அல்ல

சென்னை : 'குரூப் - ௧ தேர்வுக்கான விண்ணப்பத்தில், அரசு ஊழியர் இல்லை என, வங்கி ஊழியர் குறிப்பிட்டது சரியே என்பதால், டி.எஸ்.பி., பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் - ௧ பணியிடங்களுக்கான தேர்வு, ௨௦௧௬ நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்ற, மனோஜ்குமார் என்பவர், அதிக மதிப்பெண்கள் பெற்றார்.நேர்முக தேர்வுக்கும் அழைக்கப்பட்டார். அங்கு, ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.அனுமதி மறுப்பு .
அப்போது, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, 'நீங்கள் அரசு ஊழியரா' என்ற கேள்விக்கு, 'இல்லை' என, பதில் அளித்திருந்தார். ஆனால், ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்தார். உண்மையை மறைத்ததற்காக, நேர்முக தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனோஜ்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 'விண்ணப்பத்தை நிரப்பும் போது, சந்தேகம் ஏற்பட்டிருந்தால், தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும். 
'வங்கிகளில் பணியாற்றுவதால், அரசு ஊழியர் இல்லை எனக் கருதி, விண்ணப்பத்தை நிரப்பி உள்ளார்' என, உத்தரவில் கூறியிருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனோஜ்குமார் மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜரானார். தகுதியிழப்புநீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ரிசர்வ் வங்கி, அரசின் அங்கம் என்பது உண்மை தான். 
இருந்தாலும், ரிசர்வ் வங்கி ஊழியர்களை, அரசு ஊழியர்கள் எனக்கூற முடியாது. விண்ணப்பத்தில், அரசு ஊழியரா என்ற பகுதி மட்டுமே உள்ளது. அதில், வங்கி ஊழியர் ஒருவர், அரசு ஊழியர் என, பதிவிட முடியாது. அரசு ஊழியர் என, குறிப்பிட்டால், தகுதியிழப்பை சந்திக்க வேண்டும். எனவே, அரசு ஊழியர் இல்லை என, மனுதாரர் சரியாக குறிப்பிட்டுள்ளார். இருந்தும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரருக்கு நேர்முக தேர்வு நடந்து, டி.எஸ்.பி., பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நியமன உத்தரவு வழங்க, அரசுக்கு ஒரு வாரத்தில் பெயரை அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment