இது ஒவ்வொரு பெற்றோர்களுக்குமானது - `ஒவ்வொரு பக்கத்திலும் தந்தையை வரைந்த சிறுவன்!'- கண்ணீரில் மிதந்த கேரளா

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் பிஜூ. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். கடந்த ஆண்டு பிஜூ திடீரென்று இறந்து போனார். கணவர் இறந்த சில தினங்களிலேயே பிஜூவின் மனைவி நெருங்கிய உறவினரான அருண் ஆனந்த் என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.  பிஜூவுக்குப் பிறந்த குழந்தைகளைக் கண்டாலேயே அருண் ஆனந்துக்கு ஆகாது. பிஜூவின் 7 மற்றும் 4 வயது மகன்களை அருண் ஆனந்த் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.


தன் குழந்தைகளை அருண் ஆனந்த் கொடுமைப்படுத்துவதை தாயும் தட்டிக் கேட்கவில்லை. போதைப் பழக்கத்துக்கு அடிமையான அருண் ஆனந்த் அடிக்கடி குழந்தைகளை தனி அறையில் பூட்டிப் போட்டுவிட்டு குழந்தைகளின் தாயுடன் இரவு நேரத்தில் காரில் ஊர் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். தனி அறையில் சிறுவர்களை அடைத்துவிட்டு இரவு 11 மணியளவில் வெளியே சென்றால் காலை 5 மணிக்கு வீடு திரும்புவார்கள். இரவு நேரத்தில் சிறுவர்கள் பயந்தபடி அறைக்குள் இருப்பார்கள். 


சிறுவர்களுக்குச் சரியாக உணவும் அளிப்பதில்லை. பள்ளிக்குச் சென்றால் சக மாணவர்களிடத்தில், `சாப்பிட ஏதாவது தாங்களேன்' என்று பசியுடன் கேட்பார்களாம். இந்த நிலையில், மார்ச் 28-ம் தேதி இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சிறுவனின் 4 வயது தம்பி படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டான். இதைப் பார்த்த அருண் ஆனந்த் 4 வயது சிறுவனை அடித்துள்ளார். தம்பியை அடிப்பதைத் தடுக்க சிறுவன் முயன்றான். இதனால், சிறுவனைத் தரையில் தள்ளி காலால் மிதித்துத் துன்புறுத்தியுள்ளார். முகத்தைப் பிடித்து தரையில் ஓங்கி அடித்துள்ளார். கடுமையான இந்தத் தாக்குதலில் சிறுவனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
தொடர்ந்து மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் மண்டை ஓடு உடைந்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. உடல் முழுவதும் 20 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. சிறுவனின் நிலையைக் கண்டு மருத்துவர்கள் பதறிப் போனார்கள். தகவல் வெளியே பரவியது. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை கண்டு கேரள மக்கள் கொந்தளித்தனர். உடனடியாக அருண் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

சிறுவன் தங்கியிருந்த அறையை போலீஸார் சோதனையிட்டனர். சிறுவனின் நோட்டுப் புத்தகங்களை ஆய்வு செய்தபோது, ஒரு நோட்டுப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கண்ணாடி அணிந்த மனிதர் போன்ற படம் வரையப்பட்டிருந்தது. அந்தப் படம் சிறுவனின் தந்தை பிஜூ கண்ணாடி அணிந்திருப்பார். 

அதேபோன்று உள்ளதாக அக்கம் பக்கத்தினர் சொல்ல அங்கிருந்த பெண் போலீஸாரின் கண்களில் நீர்த் துளிகள் திரண்டு விட்டது. தந்தையை இழந்த நிலையில், தாயின் ஆதரவும் கிடைக்காமல் இரு சிறுவர்களும் தந்தையின் நினைவாகவே இருந்துள்ளனர். சிறுவனின் உடல் அடக்கத்தில் ஆயிரக்கணக்கான கேரள மக்கள் கண்ணீருடன் பங்கேற்றனர். 

தற்போது, சிறுவனின் தந்தையையும் அருண் ஆனந்த் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் பிஜூ உடலில் எந்த வியாதியும் இல்லாத நிலையில், திடீரென்று `கார்டியாக் அரெஸ்ட்' வந்து இறந்து போனதாக சொல்லப்படுகிறது. போலீஸார், பிஜூவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

No comments:

Post a Comment