பள்ளி கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு

புதுச்சேரி:ஜூன் மாதம் நடக்கும், பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு, பதிவு செய்து கொள்ளுமாறு புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு வரும் ஜூன் 2019 நடக்கிறது. மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு 8 ம் தேதி முதல் வரும் 12 ம் தேதி வரை அரசு தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் ரூ.500 கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு அனுமதி திட்டத்தில் வரும் 23 ம் தேதி மற்றும் 24 ம் தேதி ஆன் லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
ஆண்கள், தங்களது விண்ணப்பங்களை புதுச்சேரி முத்தியால்பேட் சோலைநகர் சாலை தெருவில் உள்ள அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப் பள்ளியிலும், பெண் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதி வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், தங்கள் விண்ணப்பத்தினை ஆன் - லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.தேர்வு கட்டணம் மற்றும் செலுத்தும் முறை;தனித் தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வு கட்டணத் தொகை ரூ.125, மற்றும் பதிவு கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175யை சேவை மையங்களில் பணமாக செலுத்த வேண்டும். நேரடி தனித் தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சியில் கலந்துக் கொண்டு முடித்தமைக்கான அசல் வருகைச் சான்றிதழ் பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து பெற்றும் மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்தமைக்கான அசல் மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில், குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை(அப்ளிகேஷன் எண்) பயன்படுத்தியே, அரசு தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில் தேர்வுக் கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment