வீடுகளில் கூடுதல் வைப்பு தொகை; இம்மாதத்தில் வசூலிக்குது வாரியம்

வீடுகளில் கூடுதல் வைப்பு தொகை; இம்மாதத்தில் வசூலிக்குது வாரியம்


சென்னை: மின் பயன்பாடு அதிகம் உள்ள வீடுகளில், இம்மாதம் முதல் மின் வாரியம், கூடுதல் காப்பு வைப்புத்தொகை வசூலிக்க உள்ளது.

வீடுகளுக்கு, மின் இணைப்பு வழங்கும் போது, மின் வாரியம், வைப்புத்தொகை வசூலிக்கிறது. இது, மின் பயன்பாட்டை பொறுத்து, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். மின் இணைப்பு பெறும் போது, குறிப்பிட்டிருந்த அளவை விட, அதிக மின்சாரம் பயன்படுத்துவோரிடம், கூடுதல் காப்பு வைப்புத்தொகை வசூலிக்கப்படும்.தள்ளி வைப்புகுறைந்த மின் பயன்பாடு உள்ளவர்களிடம், அந்த தொகை வசூலிக்கப்படுவதில்லை.

மேலும், கூடுதல் வைப்பு தொகை, 2018லும் வசூலிக்கப்படவில்லை. இதனால், ஏப்ரல் முதல், அந்த தொகை வசூலிக்கப்பட வேண்டும். இதற்காக, ஏப்ரலில் வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் போது, வைப்பு தொகை விபரமும், நுகர்வோரிடம் தெரிவிக்கப்படும்.

இந்த ஆண்டு, லோக்சபா மற்றும், 18 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்., 18ல் இடைத்தேர்தல் நடந்தது. இதனால், வைப்பு தொகை வசூலிக்கும் பணி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, தேர்தல் முடிந்து, இரு வாரங்களுக்கு மேலாகிறது. எனவே, இம்மாதம் முதல், மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் போது, நுகர்வோரிடம், கூடுதல் வைப்பு தொகையையும் வசூலிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள, ஆண்டு வட்டி வழங்கப்படும்.

ஒரே நாளில் ஓய்வு:
சென்னை வடக்கு, திருச்சி, மதுரை உட்பட, ஒன்பது மண்டலங்களாக, மின் வாரியம் செயல்படுகிறது. மேலும், நிலக்கரி, தனியார் மின் கொள்முதல் உள்ளிட்ட பல பிரிவுகளும்; ஐந்து அனல் மின் நிலையங்களும் உள்ளன. இவை, தலா, ஒரு தலைமை பொறியாளரின் கீழ் செயல்படுகின்றன. மின் வாரியத்தில், தலைவர், இயக்குனர்களுக்கு அடுத்து, தலைமை பொறியாளர் பதவி, மிக முக்கியமானது. இந்த பதவியில், 40 பேர் உள்ளனர்.

இந்நிலையில், சென்னை வடக்கு, திட்டமிடல், உபகரண கொள்முதல்; கோவை, ஈரோடு மண்டலங்கள்; வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் ஆகியவற்றின் தலைமை பொறியாளர்கள், நேற்று ஒரே நாளில் ஓய்வுபெற்றனர். மேலும், நான்கு மேற்பார்வை பொறியாளர்கள்; ஏழு செயற் பொறியாளர்கள் உட்பட, இதர பிரிவுகளில், 100க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை வடக்கு, உபகரணம் கொள்முதல் ஆகிய பிரிவுகளின் கீழ், பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அவற்றுக்கு, ஒப்பந்த நிறுவனங்கள் பரிந்துரைக்கும் நபர்களையே, தலைமை பொறியாளர்களாக நியமிக்க, அரசியல்வாதிகள் சிபாரிசு செய்வர்.ஆனால், மின் வாரிய தலைவராக இருந்த சாய்குமார், அரசியல் சிபாரிசை ஏற்காமல், திறமையான மற்றும் நேர்மையான நபர்களை, தலைமை பொறியாளர்களை நியமித்தார்.தற்போது, காலியாகியுள்ள அனைத்து தலைமை பொறியாளர் பணியிடங்களிலும், நேர்மையான நபர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment