சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் புது திட்டம் அமல்; கட்டமைப்பு வசதியை பகிர்ந்து கொள்ளலாம்

புதுடில்லி: பள்ளி கல்வியை மேம்படுத்தும் வகையில், புதுமையான திட்டத்தை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, உள்கட்டமைப்பு, ஆசிரியர், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும்.


cbse,சி.பி.எஸ்.இ., பள்ளி,புது திட்டம்,அமல்,கட்டமைப்பு வசதி,பகிர்ந்து கொள்ளலாம்


நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், பள்ளி கல்வியை மேம்படுத்த, புதிய திட்டத்தை, சி.பி.எஸ்.இ,, செயல்படுத்த உள்ளது.


கூட்டு கல்வி குழு:


இது குறித்து, சி.பி.எஸ்.இ., செயலர், அனுராக் திரிபாதி கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. நாடு முழுவதும், 4,500 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை உறுப்பினர்களாக சேர்த்து, குழுக்கள் உருவாக்கப்படும்; இது, கூட்டு கல்வி குழு என, அழைக்கப்படும். ஒரு குழுவில், ஐந்து பள்ளிகள் இடம் பெற்றிருக்கும்.


புதிய திட்டத்தின் படி, இந்த பள்ளிகள், தங்களிடம் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை, மற்ற பள்ளிகளுடன் பகிர்ந்து கொள்ளும். மாணவர் சேர்க்கை, ஆசிரியர் - மாணவர் கலந்துரையாடல், விளையாட்டு, கலை, கலாசார விழாக்கள் உட்பட, மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும், இந்த குழு மேற்கொள்ளும். முதல் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை, இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு, ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும். இதனால், மாணவர்களுக்கு, துவக்கம் முதலே, பொதுத் தேர்வு எழுதும் எண்ணம் ஏற்படும்.


உள்கட்டமைப்பு:


இந்த திட்டம், ஜூலை, ௧ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தை பெரும்பாலான பள்ளிகள் வரவேற்றுள்ளன. பள்ளிகள் ஒரு குழுவாக செயல்படும் போது, அந்த பகுதியில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்காது. சில பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பயன்படுத்தப் பட்டிருக்காது.

உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாத பள்ளிகள், சிறப்பாக உள்ள பள்ளிகளின் வசதிகளை பயன்படுத்த முடியும். ஆய்வகம், நுாலகம், விளையாட்டு மைதானம், கலையரங்கம் உட்பட பல வசதிகளை பகிர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பள்ளிகளிலும், குறிப்பிட்ட சில பாடங்களை நடத்துவதில், சிறந்த ஆசிரியர்கள் இருப்பர்; அவர்கள் மற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உதவி செய்வர்; ஆலோசனை வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்வு நெருக்கடிக்கு தீர்வு:
இந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ - மாணவியருக்கு, தேர்வு நெருக்கடியை போக்க, சி.பி.எஸ்.இ., புதிய முறையை கையாண்டது. இது பற்றி, சி.பி.எஸ்.இ.,யின் மக்கள் தொடர்பு அதிகாரி, ராமா சர்மா கூறியதாவது: மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை கூறும் வகையில், இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தினோம். இந்த தொலைபேசி எண்ணில் பேசியோருக்கு, நிபுணர்கள் குழு மூலம், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தேர்வுக்கு தயாராவது குறித்தும், தேர்வு அச்சத்தை போக்குவது குறித்தும், அறிவுரைகள் வழங்கப்பட்டன. பெற்றோருக்கும், தங்கள் பிள்ளைகளிடம், தேர்வு பயம் ஏற்படுத்துவதை தவிர்க்க, அறிவுரைகள் வழங்கப்பட்டன. இணையதளம் வழியாக, நேரடி ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதற்காக, 87 சிறப்பு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் தான், அதிக கேள்விகள் கேட்டனர். இந்த நடவடிக்கையால், இந்த ஆண்டு, மாணவ - மாணவியர், பெரும் நெருக்கடியின்றி, தேர்வு எழுதியதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment