இன்ஜி., கவுன்சிலிங் இணையதள உரிமம், 'அவுட்'

Image result for ANNA UNIV

சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, நாளை விண்ணப்ப பதிவு துவங்கவுள்ள நிலையில், விண்ணப்ப பதிவுக்கான ஆன்லைன் இணையதளத்தின், உரிமம் காலாவதியாகி விட்டது. உரிமத்தை, உரிய காலத்தில் புதுப்பிக்காமல், உயர்கல்வித் துறை, கோட்டை விட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர் சேர்க்கை, ஒவ்வோர் ஆண்டும், அண்ணா பல்கலை கவுன்சிலிங் வாயிலாக நடத்தப்படும். இந்த ஆண்டு, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், உயர்கல்வி செயலர், மங்கத்ராம் சர்மா மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன் ஆகியோர் இடையே, ஒருங்கிணைப்பு இல்லை. 
அதனால், கவுன்சிலிங் நடத்தும் பணியில் இருந்து, அண்ணா பல்கலை விலகியுள்ளது. 'அண்ணா பல்கலை பேராசிரியர்கள், ஆராய்ச்சி பணி மேற்கொள்ள உள்ளனர்' என, அரசுக்கு துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையை தீர்க்காத உயர்கல்வி துறை, தங்கள் துறையே நேரடியாக கவுன்சிலிங்கை நடத்தும் என, அறிவித்துள்ளது.அனுபவம் மிக்கவர்களை புறந்தள்ளி விட்டு, சுமுகமாக கவுன்சிலிங்கை நடத்த முடியுமா என, கல்வியாளர்களும், பெற்றோரும் சந்தேகம் எழுப்பினர். இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆன்லைன் உரிமத்தை கூட புதுப்பிக்காமல், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் கோட்டை விட்டுள்ளது. 

கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நாளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து, உயர்கல்வி துறை சரியான வழிகாட்டல்களை தெரிவிக்கவில்லை. கவுன்சிலிங்குக்கு பொறுப்பேற்றுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தங்களின், www.tndte.gov.in என்ற இணையதளத்தில், வெறும் அறிவிக்கையை மட்டும் பதிவு செய்து உள்ளது.அந்த இணையதளத்தில், ஆன்லைன் பதிவு செய்வதற்கான, www.-tneaonline.in என்ற, இணையதள முகவரியை, உயர்கல்வி துறை கொடுத்திருந்தது. அந்த இணையதளம், சில நாட்களாக இயங்கி வந்த நிலையில், நேற்று அடியோடு முடங்கியது. 
இணையதளத்தின் உரிமத்தை புதுப்பிக்காததால், அதன் உரிமையை, 'கோ டேடி' என்ற ஆன்லைன் இணையதள டொமைன் நிறுவனம், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.இந்த விவகாரம், இன்ஜினியரிங் கல்லுாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. ஏற்கனவே, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், கவுன்சிலிங் நடத்துவதில், உயர்கல்வி துறை மேற்கொண்டுள்ள அலட்சியத்தால், கல்லுாரிகளை மூடி விட்டு செல்ல வேண்டுமா என, நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment