*தபால் ஓட்டுச் சீட்டு வழங்காவிட்டால் தேர்தல் பணி புறக்கணிப்பு:* *ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அறிவிப்பு*

💥💥💥💥💥💥💥💥💥
*தபால் ஓட்டுச் சீட்டு வழங்காவிட்டால் தேர்தல் பணி புறக்கணிப்பு:* *ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அறிவிப்பு*
என். சன்னாசி
மதுரைதமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன் தொடர் வேலைநிறுத்தம் செய்தனர்.

அரசின் கடும் நடவடிக்கை யால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகள் அரசுக்கு எதிராக விழும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் தபால் வாக்குகளை முடக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள 15 ஆயிரம் தபால் வாக்குகளில் நேற்று வரை 10 சதவீதம் பேருக்குக்கூட, அவர்களுக்கான ஓட்டுச் சீட்டுகள் கிடைக்கவில்லை என, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் புகார் கூறுகின்றனர்.


அதன் மாநில ஒருங்கிணைப் பாளர் நீதிராஜன் கூறியதாவது: மதுரையில் மட்டும் 15 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறோம். தேர்தல் பணிக்கான பயிற்சிக் கடிதங்களுடன் தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் (படிவம்-12) மார்ச் 24-ம் தேதி வந்தது. மாவட்டத்துக்குள் தேர்தல் பணிபுரிவோர் அந்தந்த பூத்களில் தங்களது ஓட்டுகளைப் பதிவு செய்யலாம்.

பிற மாவட்டங்களுக்குப் பணி ஒதுக்கும்போது, தபால் வாக்குச் சீட்டுகளை மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பயிற்சி மையங்களில் சேகரிக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி ஏப்.7-ம் தேதிக்குள் ஓட்டுச்சீட்டுகள் சம்பந்தப்பட்டோரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது.

படிவத்தில் அதிகாரிகள் கையெழுத்துடன் தங்களுக்கான வாக்குகளைப் பதிவு செய்து, தேர்தல் பயிற்சி மையங்களில் வைக்கப்படும் பெட்டிகளில் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஆய்வு செய்தபோது இதுவரை 10 சதவீதம் பேருக்கு மட்டுமே ஓட்டுச்சீட்டு கிடைத்துள்ளது. எஞ்சிய 90 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை. உசிலம்பட்டி, மேற்குத் தொகுதிக்கு நேற்று தபால் ஓட்டுக்கான அலுவலர்கள் வரவில்லை. உதவித் தேர்தல் அலுவலர்களிடம் புகார் செய்தபோது, ஓட்டுச்சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மழுப்பலாக பதில் அளித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியின் (ஆட்சியர்) கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். இது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பர் எனத் திட்டமிட்டு, தபால் வாக்குகளை முடக்கப் பார்க்கின்றனர். ஏற்கெனவே, தேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் சிலர் கூறிய நிலையில் மேலும் சந்தேகமாக உள்ளது. உரிய முறையில் தபால் ஓட்டுச் சீட்டுகளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கச் செய்யவில்லை எனில் தேர்தல் பணியைப் புறக்கணிப்போம், என்றார்.

No comments:

Post a Comment