சி.ஏ., படிப்பு: மாணவர்களுக்கு, 'டிப்ஸ்'

சென்னை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பட்டய கணக்காளர் பயிற்சி குறித்த விபரங்களை அறிய, பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டய கணக்காளர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து உள்ளன.இந்தியாவில் முதன் முறையாக, இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின், தென் மண்டலம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை இடையே, 2018, ஜூன், 5ல், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பட்டய கணக்காளர் சங்கத்தின், கல்வி ஆலோசனைக் குழு, பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் கலந்தாய்வுகளை நடத்தி வருகிறது.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், 352 முதுகலைப் பாட ஆசிரியர்களுக்கு, வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வணிகக் கணிதம் மற்றும் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது.தற்போது, மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அனைத்து வகை மாணவர்களும், பட்டய கணக்காளர் பயிற்சி தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும், சந்தேகங்களுக்கான விளக்கங்களை பெறவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, பட்டய கணக்காளர் சங்கத்தின், 12 கிளைகளிலும், மே, 2 முதல், 31 வரை, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களை, www.icai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment