அதிக நேரம் ஏ.சியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை தகவல்?


உடலின் மிகப்பெரிய உறுப்பான தோல், ஜீரண மண்டலம், கண்கள் உள்ளிட்ட பல உறுப்புகள் அதிக ஏ.சி. பயன்பாட்டால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.சி. அறைகளில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு உலர் கண்கள் (Dry Eyes) பிரச்னை வர வாய்ப்பு அதிகம்.

கோடை வந்துவிட்டது. வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஏ.சி.அறைகளில்  தஞ்சம் அடைகிறோம். அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் ஏ.சி. இருந்தால்தான் உட்காரவே முடிகிறது என்ற நிலை இருக்கிறது. ஹோட்டலில் சாப்பிடப் போனால் கூட ஏ.சி. அறையில்தான் இடம் பிடிக்கிறோம். ஆனால் ஏ.சி. அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கண்கள்  உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் உணருவதில்லை. 

அதிக ஏ.சி. பயன்பாடு உலர் கண்கள் பாதிப்பை ஏற்படுத்தும்

வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் ஏ.சி.யைப் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 14 முதல் 16 மணி நேரம் ஏ.சி.யில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் செயற்கை காற்று மற்றும் குளிர்ந்த சீதோஷணம் இரண்டுமே உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை. 

'உடலின் மிகப்பெரிய உறுப்பான தோல், ஜீரண மண்டலம், கண்கள் உள்ளிட்ட பல உறுப்புகள் அதிக ஏ.சி. பயன்பாட்டால் பாதிக்கப்படுவதாக' மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.சி. அறைகளில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு உலர் கண்கள் (Dry Eyes) பிரச்னை வர வாய்ப்பு அதிகம். மருத்துவச் சொற்களில் இது  'ட்ரை ஐ சின்ட்ரோம்' (Dry Eye Syndrome) என்று அழைக்கப்படுகிறது.
உலர் கண்கள் பிரச்னை ஏன் ஏற்படுகின்றன, இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க  என்ன வழி? 

கண் மருத்துவர் சுந்தரியிடம் கேட்டோம்.

"ஏ.சி.அறைகளில் தொடர்ந்து பணியாற்றுவோர் கண்களில் உலர்தன்மை, உறுத்தல், எரிச்சல், பிசுபிசுப்பு, நீர் வடிதல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவர்களிடம் செல்வது அதிகரித்து வருகிறது. இவைதான் உலர் கண்களின் அறிகுறிகள். 

கண் மருத்துவர் சுந்தரிகண்கள் எந்தப் பிரச்னையும் இன்றி இயல்பாகச் செயல்பட போதிய அளவு கண்ணீர் இருக்கவேண்டியது அவசியம். கண்களில் இருக்கும் கண் நீர்ப் படலம் (Tear Film) எண்ணெய்த்தன்மை, நீர்த்தன்மை, புரதம் ஆகிய மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஏ.சி. அறைகளில் குறைவான வெப்பநிலை காணப்படும்போது, காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து, வறண்டக் காற்று வீசும். இதனால் நமது கண்களில் உள்ள கண் நீர்ப் படலத்தில் இருக்கும் நீர்த்தன்மை ஆவியாகிவிடும்.

தொடர்ச்சியாக ஏ.சி.அறைகளில் இருக்கும்போது கண்களின் இமைகளில் இருக்கும் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் கொழுப்பு அமிலத்தின் அளவும் தரமும் குறைந்துவிடும். இந்த இரண்டு காரணங்களால் கண்கள் இயல்பாக மூடித்திறப்பதற்கான தன்மை இல்லாமல் போய்விடும். விளைவு உலர் கண்கள் பாதிப்பு.


ஏ.சி. இயந்திரங்களை சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் வளருவதற்கு வாய்ப்பாக அமையும். இதனால் உலர் கண்களுடன், கண்களில் நோய்த்தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது.

முக்கிய அறிகுறிகள்

கண்களில் எரிச்சல் உணர்வு, உலர்தன்மை, உறுத்தல், வலிப்பது போன்ற உணர்வு, கண்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு, மங்கிய பார்வை, கண்ணீர் நீர் வடிதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். உலர் கண்கள் பிரச்னை ஏற்படுபவர்களுக்கு வாசிக்கும் வேகமும் குறையும். 

உலர் கண்கள் ஏற்படுவதற்கான பிற காரணங்கள்

தூக்கம்

மெனோபாஸ் நிலையை அடையும்போது பெண்களுக்கு உலர் கண்கள் பிரச்னை ஏற்படலாம். வைட்டமின் ஏ குறைபாடு, சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். சில மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாகவும் இந்தப் பிரச்னை வரலாம். லேசர் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், கண் நீர்ப் படலம் சேதமடைதல், முடக்குவாதம் உள்ளிட்ட சில நோய்கள், காற்று மாசு, அதிக நேரம் கணினி, செல்போன் பார்ப்பது போன்ற காரணங்களாலும் உலர் கண்கள் பிரச்னை ஏற்படலாம். தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் காற்று மாசு அதிகமாகக் காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உலர் கண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பிறரைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

உலர் கண்

தடுப்பது எப்படி?

* ஏ.சி. அறைகளில் அதிக நேரம் இருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* ஏ.சி. அறையின் வெப்பம் 23 டிகிரிக்கும் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

* ஏ.சி. காற்று நேரடியாக முகத்தில்படுவதைப் போன்று உட்காரக்கூடாது.

*  நீங்கள் இருக்கும் ஏ.சி அறையின் ஒரு மூலையில் சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வையுங்கள். காற்றின் ஈரப்பதத்தை நிர்வகித்து உலர் சருமம் மற்றும் உலர் கண்கள் ஏற்படாமல் தடுக்க இது உதவும்.

*  நீர்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.  போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும்.

*  நீண்ட நேரம் கண் இமைக்காமல் கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். கண்களை அடிக்கடி மூடித்திறப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். 

காய்கறிகள் பழங்கள்

*  7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். அப்போதுதான் கண்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும்.

* வெளியில் செல்லும்போது அடர்நிற கண்ணாடியும், கம்ப்யூட்டரில் பணியாற்றும்போது தேவைப்பட்டால் அதற்கான கண்ணாடியும் கட்டாயம் அணிய வேண்டும்.

* கண்களில் எரிச்சல் தொடர்ந்து காணப்பட்டால், கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று கண்ணீர் அதிகம் சுரப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் உலர் கண்கள் பிரச்னை தீவிரமாகி கருவிழி சேதம், கருவிழியில் புண் போன்ற பார்வையைப் பாதிக்கும் தீவிர பிரச்னைகள் ஏற்படலாம்" என்கிறார் அவர்.

No comments:

Post a Comment