தமிழில் பழைய பாடத்திட்டம் தொடரக் கோரி வழக்கு

மதுரை : பள்ளிகளில் தமிழ் பாடத்தில் பழைய பாடத் திட்டம், பழைய வினா -விடை முறை மற்றும் தேர்வு முறையை தொடர, தமிழக அரசுக்கு உத்தரவிட தாக்கலான வழக்கு விசாரணையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.வாடிப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியதாவது:தமிழக பள்ளிகளில், 2019 - 20 கல்வியாண்டு முதல், புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இப்புதிய கல்வி திட்டத்தில், தமிழ் பாடத்தில் பழைய வினா- விடை அமைப்பு முறை, முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. கேள்விகள் எப்படி வேண்டுமானலும், கேட்கப்படும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.

இப்புதிய முறையால், அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் இருந்த தமிழ் இரண்டாம் தாள் நீக்கப்பட்டுள்ளது.இது மாணவர்களின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும். அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில், வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும்.சமச்சீர் கல்வி என்பது, அனைவருக்கும் சமமான, எளிமையாக புரியும் வகையில் இருக்க வேண்டும்.புதிய கல்வித் திட்டம் அவ்வாறு இல்லை. தமிழ் பாடத்தில் பழைய பாடத் திட்டம், பழைய வினா-விடை முறை மற்றும் தேர்வு முறை தொடர வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரணையை ஜூனிற்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment