சென்னை:பத்தாம் வகுப்புக்கான சிறப்பு தேர்வில் பங்கேற்கும் தனி தேர்வர்கள், வரும், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.அரசு தேர்வுகள் துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பித்து, பங்கேற்காதவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் படித்த பள்ளிகளிலும், தனி தேர்வர்கள், தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளிலும், 'ஆன்லைனில்'விண்ணப்பிக்கலாம். வரும், 6ம் தேதி பிற்பகல் முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.

தனியார் பிரவுசிங் மையங்கள் வழியே விண்ணப்பிக்க முடியாது. தேர்வுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்கும் பள்ளிகளில், ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் தேதி, பின் அறிவிக்கப்படும். ஹால் டிக்கெட்டில், தேர்வு மைய முகவரி இடம் பெற்றிருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.