திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: 158 பேருக்கு ரொக்கப் பரிசுதிருச்சி சேவா சங்கம் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுடன் (இடமிருந்து) புலவர் ராமசாமி, காமராஜ், திருவண்ணாமலை குப்பன்,

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில், 158 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், திருச்சி மாவட்டம் துறையூரில் 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும்,  புள்ளம்பாடியில் 2010 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து, திருச்சியில் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான போட்டி திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், திருச்சி, திருவள்ளூர், சென்னை, மதுரை, வேலூர்,   நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 297 பேர் போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். இவர்களில் 240 மாணவ, மாணவிகள்  புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் பங்கேற்று திருக்குறள்களை ஒப்பித்தனர்.
இதில் திணறாமல், தெளிவாக திருக்குறள்களை ஒப்பித்த மாணவர், மாணவிகளில் இருநிலைகளில் பரிசுக்குரியவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். 1,330 திருக்குறள்களையும் ஒப்பித்த 31 பேர் தலா ரூ.2 ஆயிரம் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.  இவைத்தவிர முதல் 500 குறள்களை பிழையின்றி ஒப்பித்த 101 பேர் தலா ரூ.500 ரொக்கப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்கு, பேராசிரியர்  தெ. ஞானசுந்தரம் தலைமை வகித்தார். கி. சிவா வரவேற்றார். விஜயா பதிப்பக உரிமையாளர் மு. வேலாயுதம் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். சுபம் பிரைட் கேரியர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் பொ. சுந்தரராஜ், திருக்குறள் த. திருமூலநாதன் ஆகியோர் பரிசு பெற்றவர்களை வாழ்த்திப் பேசினார்.
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை தலைவர் பூவை பி. தயாபரன் மற்றும் நிர்வாகிகள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா மேடையில் 132 பேருக்கு ரூ.1.12 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 26 பேருக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment