பிளஸ் 1 தேர்ச்சி அதிகரிப்பு மாணவர் சேர்க்கை குறைவு


சென்னை:சென்னையில், பிளஸ் 1 தேர்வில், 2018ம் ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும்,மாணவர் சேர்க்கை எண்ணிக்கை சரிந்துள்ளது.
சென்னையில், பிளஸ் 1 தேர்வில், 2018ல், 25 ஆயிரத்து, 947 மாணவியர் உட்பட, 48 ஆயிரத்து, 714 பேர் பங்கேற்றனர். அவர்களில், 45 ஆயிரத்து, 987 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 94.40 சதவீத தேர்ச்சி.இந்த ஆண்டு, பிளஸ் 1 தேர்வில், 46 ஆயிரத்து, 551 பேர், பிளஸ் 1 தேர்வை எழுதினர். அவர்களில், 45 ஆயிரத்து, 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 96.86 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

ஆனால், 2018ம் ஆண்டை விட, இந்த ஆண்டு, 2,163 பேர் குறைவாகவே தேர்வு எழுதி உள்ளனர். சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில், 22 பள்ளிகளைச் சேர்ந்த, 3,926 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 3,613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 92.03 சதவீதம்.கடந்த, 2018ம் ஆண்டை விட தேர்ச்சி விகிதம், 2.31 சதவீதம் அதிகம். ஆனால், 2018ஐ விட, 92 பேர் குறைவாகவே தேர்வு எழுதியுள்ளனர்.பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிவித்த பின், மற்ற இடங்களை போல், தலைநகர் சென்னையிலும், அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.