பட்டம் படிக்க தகுதியில்லாத பிளஸ் 2 பிரிவுகள் தேவையா?

சென்னை:கல்லுாரி படிப்புக்கு தகுதியில்லாத பாடப் பிரிவுகள் தொடர்வதால், உயர் கல்வியில் சேர முடியாமல், மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, அரசின் விதிகளின்படியே பாடங்கள் உருவாக்கப்படுகின்றன. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, உயர் கல்வித்துறை சார்பில், சில தகுதி படிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.குறிப்பிட்ட சில பட்டப்படிப்பில் சேர்வதற்கு, பிளஸ் 2வில், எந்த பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும் என, உயர் கல்வித்துறை வரையறுத்துள்ளது.
இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை, பிளஸ் 1, பிளஸ் 2வில் நடத்தும் பல பாடப்பிரிவுகள், பட்டப்படிப்பில் சேர தகுதியானதாக இல்லை என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உதாரணமாக, 'ஹோம் சயின்ஸ்' என்ற பாடப்பிரிவு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், தொழிற்கல்வி படிப்பாக நடத்தப்படுகிறது.இதில், ஹோம் சயின்ஸ் என்ற பாடமும், உணவு தொழில்நுட்பம் என்ற பாடமும் இடம் பெற்றுள்ளன.ஆனால், தமிழக கல்லுாரிகளில், ஹோம் சயின்ஸ் படிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2வில், உயிரியல் மற்றும் வேதியியல் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதனால், பிளஸ் 2வில், ஹோம் சயின்ஸ் பிரிவை எடுத்த மாணவர்களுக்கே, பட்டப்படிப்பில், ஹோம் சயின்ஸ் பிரிவில் சேர முடியாத நிலை உள்ளது.இதுபோன்று, பல பாடப்பிரிவுகள், உயர் கல்வியில் சேர்வதற்கு தகுதியற்றதாக உள்ளதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பொறுப்பற்ற செயல்!
உயர் கல்விக்கான பள்ளி பாடத்தையும், அரசு வேலைக்கு தகுதியான பட்டப் படிப்புகளையும் இறுதி செய்யும் உயர் கல்வித்துறை, அவற்றின் பட்டியலை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது. உயர் கல்விக்கு என, ஒழுங்கான இணையதளம் கூட கிடையாது.அதேபோல், பிளஸ் 1 பாடப் பிரிவை உருவாக்கும் பள்ளி கல்வித்துறை, பட்டப் படிப்புகளுக்கான பாடத் தகுதிகளை அறிந்த பின், அதற்கேற்ற பாடப் பிரிவுகளை, பள்ளிகளில் நடத்த வேண்டும். மாறாக, தங்கள் விருப்பத்துக்கு, பாடப் பிரிவுகளை உருவாக்கி, அவற்றில் மாணவர்களை சேர்க்கும் நிலை மாற வேண்டும்.இதுபோன்ற அலட்சிய போக்கால், உயர் கல்விக்கு செல்ல முடியாமல், மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment