சி.பி.எஸ்.இ., தேர்வில் 3ம் இடம் சென்னை மாணவனுக்கு பாராட்டு

சென்னை:சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 தேர்வில், சென்னை மாணவர், தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின.

மே மாதம், இரண்டாவது வாரத்தில், முடிவுகள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவால், நேற்று திடீரென தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், உ.பி.,யை சேர்ந்த இரு மாணவியர், 500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று, நாட்டிலேயே முதல் இடம் பிடித்தனர். உத்தரகண்ட், உ.பி., மற்றும் ஹரியானாவை சேர்ந்த மூன்று பேர், 498 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடம் பெற்றனர். 497 மதிப்பெண்கள் எடுத்து, 18 பேர், மூன்றாம் இடம் பிடித்தனர்.

மூன்றாம் இடம் பெற்றதில், சென்னையை சேர்ந்த மாணவன் கார்த்திக் பாலாஜியும் ஒருவர். இவர், கே.கே.நகர் பத்மாசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்துள்ளார். அவருக்கு, உடன் படித்தவர்களும், உறவினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றது குறித்து, கார்த்திக் பாலாஜி கூறியதாவது:
பாடங்களை விரும்பி படித்தது தான், அதிக மதிப்பெண் பெற முக்கிய காரணம். தினமும் நான்கு முதல், ஐந்து மணி நேரம் பாடங்களை படிப்பேன். அப்போது, வேறு எதிலும் கவனத்தை சிதற விடாமல், 'ரிலாக்சாக' படிப்பேன்.மற்ற நேரங்களில், 'டிவி' பார்ப்பது, விளையாடுவது என, பொழுதை கழிப்பேன். படிப்பதில் எந்த அழுத்தமும் இன்றி, நமக்காக படிக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால், மதிப்பெண் எடுப்பதோ, தேர்வு எழுதுவதோ எளிதான விஷயம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment