சென்னை அரசு பள்ளிகளில், நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வை வழங்க, பள்ளி கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 4,102 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.பள்ளி கல்வி துறையில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, நிபந்தனைகள் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும். பதவி உயர்வுக்கு தகுதி இருந்தும், அதற்கான பதவிகள் இல்லாவிட்டால், ஊதிய உயர்வு மட்டும் தரப்படும்.ஒவ்வொரு ஆண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும். வழக்கமான பதவி உயர்வுக்கு, 2018ல் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக, பதவி உயர்வு வழங்குவது தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகின. மேலும், கல்வி ஆண்டும் முடியும் தருவாயில் இருந்ததால், பதவி உயர்வு நிறுத்தப்பட்டது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளதால், 2018ல் நிறுத்திய பதவி உயர்வை, ஆசிரியர்களுக்கு வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இதுதொடர்பாக, பள்ளி கல்வியின் மேல்நிலை பள்ளி இணை இயக்குனர், ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க, பட்டியலை இறுதி செய்து அனுப்பும்படி கூறியுள்ளார்.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலில், யாரும் விடுபட்டிருந்தால், அவர்களின் பெயரை இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் மீது, எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இருக்கக்கூடாது. இரட்டை பட்டப்படிப்பு முடித்திருக்க கூடாது. முதுநிலை பட்டப்படிப்பை முறையாக முடித்திருக்க வேண்டும் என்பன போன்ற, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியலில், 12 பிறமொழி பாடங்களில், 60 பேரும்; 13 முக்கிய பாடங்களில், முதுநிலை ஆசிரியர் பணிக்கு, 4,001 பேரும்; உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, 41 பேரும் தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.இவர்களில், 2,500 பேருக்கு மட்டுமே காலியிடங்கள் உள்ளதால், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என, தெரிகிறது. மற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், மீதமுள்ளவர்களுக்கு, தர ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்பதால், பட்டதாரி ஆசிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.பட்டியலில் இடம் பெற்றவர்கள், ஜாக்டோ - ஜியோ போராட்டம் மற்றும் தனிப்பட்ட புகார்கள் அடிப்படையில், போலீஸ் வழக்கில் சிக்கியிருந்தால், பதவி உயர்வு கிடைக்காது. எனவே, போலீசில் வழக்கு உள்ளவர்கள், அதனால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் எத்தனை பேர் என்ற பட்டியலை, மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.