அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள்
சென்னை : 'அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வாருங்கள்' என, முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை உள்ள நிறுவனங்களுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:அரசு பள்ளிகளில் படித்து, தற்போது உயர்ந்த பதவியில் இருக்கும், முன்னாள் மாணவர்கள், தொழில் அதிபர்கள், சமூக அக்கறையுள்ள நிறுவனங்கள், அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அவற்றின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், இணையதள வசதி, சுகாதார கழிவறை, ஆய்வகம், நுாலகம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்வர வேண்டும். 

கடந்த, 2018 - 19ல், எங்கள் அழைப்பை ஏற்று, பல்வேறு நிறுவனங்கள், தங்கள் சமூக பொறுப்புணர்வு நிதியில், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், அடிப்படை வசதிகளை செய்து தந்தன; அதற்கு நன்றி.அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு, எவ்வித தடையும், தாமதமும் இல்லாமல், உடனடியாக அனுமதி வழங்கும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

கல்வி என்ற ஒப்பற்ற செல்வத்தை, அடுத்த தலைமுறையினருக்கு வழங்க, சேவை மனப்பான்மை உள்ள முன்னாள் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும். அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போது, கல்வியின் தரம் மேலும் சிறக்கும்; வளம் பெறும்.எனவே, அனைவரும் வாருங்கள்; ஒன்று சேர்ந்து, அரசு பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க, கரம் கோர்த்து செயல்படுவோம்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment