பள்ளி வாகனங்கள் ஆய்வில் கல்வி அதிகாரிகள் அலட்சியம்

 நமது நிருபர் -மூன்று நாட்களில், 9,000 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வில் பங்கேற்காமல், மெத்தனமாக உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஏழாண்டுகளுக்கு முன், சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி பஸ்சின் ஓட்டை வழியாக கீழே விழுந்து, 3வயது மாணவி, ஸ்ருதி உயிரிழந்தார். அதன்பின், பள்ளி வாகனங்களுக்காக, சிறப்பு போக்குவரத்து விதிகள் உருவாக்கப்பட்டன. அவற்றை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர், போக்குவரத்து கமிஷனர், போலீஸ் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

இந்தக்குழு, மே மாதத்தில், பள்ளி வாகனங்களில் உள்ள அவசர காலக் கதவு, டயர்கள், ஹேண்ட் பிரேக், முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட, 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, தகுதிச் சான்றிதழ் வழங்கும்.தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில், 33 ஆயிரத்து, 17 வாகனங்கள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பணி, இம்மாதம் முதல் வாரத்தில் துவங்கியது. வரும், 31ம் தேதிக்குள் ஆய்வை முடிக்க வேண்டும். 

இதுவரை, 23 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. மூன்று நாட்களுக்குள், 9,000க்கும் மேற்பட்ட வாகனங்களின் ஆய்வை முடிக்க வேண்டும்.ஜூன், 3ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் நடக்கும், பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது, வருவாய்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் சரியாக பங்கேற்பதில்லை என்ற, குற்றச்சாட்டு உள்ளது. 

செங்கல்பட்டில் நடந்த ஆய்வில், கல்வித் துறை, வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள், தினமும் ஒரு துறையினர் என வராமல், ஏமாற்றிஉள்ளனர். பெரும்பாலான இடங்களில், ஆய்வு முடிவில் தான், கல்வித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது, பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment