பிளஸ் 2-வில் உயிரியலுடன் கணினி அறிவியல் பாடத்தைப் பயின்ற மாணவர்களும் வேளாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை புல முதன்மையர் எம்.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 27 இணைப்புக் கல்லூரிகள் மூலம் நடத்தப்படும் 10 பட்டப் படிப்புகளில் உள்ள 3,905 இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் புதன்கிழமை தொடங்கின. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். 
முதல் நாளில் 8,966 மாணவ-மாணவிகள் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளான வியாழக்கிழமை மாலை வரை 14,465 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, பிளஸ் 2-வில் உயிரியல் பாடத்துடன் கணினி அறிவியல் பயின்றவர்களும் வேளாண் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை புல முதன்மையரும், மாணவர் சேர்க்கை அலுவலருமான கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை உள்ளிட்ட 10 பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2-வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். அத்துடன் கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண்ணுயிரியல் போன்ற பாடங்களைப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அதேநேரம், சில பள்ளிகளில் உயிரியல் பாடப் பிரிவில் கணித பாடத்துக்கு பதிலாக கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது. இந்த மாணவர்கள் உயிரியல் படித்திருந்தாலும் வேளாண் படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. உயிரியலுடன் கணிதம் படிப்பவர்களை தகுதியானவர்களாக ஏற்றுக் கொள்ளும்போது, கணினி அறிவியல் படித்தவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோர்கள், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.
இது தொடர்பாக பல்கலைக்கழக கல்விக் குழுவில் விவாதிக்கப்பட்டு அரசிடம் அனுமதியும் பெறப்பட்டுவிட்டது. எனவே, உயிரியல் பாடத்துடன் கணினி அறிவியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்த மாணவ-மாணவிகளும் இந்த ஆண்டு முதல் வேளாண்மை பல்கலைக்கழக பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்றார்.