சென்னை, ஏழை மாணவர்களுக்கான, இலவச சேர்க்கை திட்டத்தில், 5,000 பள்ளிகளில், வரும், 6ம் தேதி, குலுக்கல் நடத்தப்படுகிறது. அதன் வாயிலாக, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, தனியார் சுயநிதி பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்கள், ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த இடங்களுக்கு, கல்வி கட்டணம், நன்கொடை இன்றி, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.புதிய கல்வி ஆண்டுக்கான, இத்தகைய மாணவர் சேர்க்கைக்கு, மே, 18 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.20 லட்சம் இடங்களுக்கு, 1.21 லட்சம்பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள, 3,000 பள்ளிகளில், நேற்று மாணவர் சேர்க்கை முடிந்தது. இதுதவிர, 5,000 பள்ளிகளில், வரும், 6ம் தேதி, குலுக்கல் முறையில் சேர்க்கை நடக்கிறது.இந்த பள்ளிகளில் சேர, மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இப்பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட, இலவச இடங்களை விட, அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், குலுக்கல் நடத்தப்பட்டு, 'அட்மிஷன்' வழங்கப்பட உள்ளது.குலுக்கல் நேர்மையாக நடக்க, பள்ளி கல்வித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட, பல்வேறு துறை பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, பார்வையாளர்களாக செல்ல உள்ளனர். அவர்கள் முன்னிலையில், குலுக்கல் நடத்தி, மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.