கணினி அறிவியல் மாணவர்களும் இனி வேளாண் படிப்பில் சேரலாம்


கோவை : 'வேளாண் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் கணினி அறிவியல் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்' என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' பதிவு பணிகளுக்கான இணையதளத்தை, நேற்று காலை, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் துவக்கி வைத்தார். மூன்று மணி நேரத்தில், 5,000 மாணவர்கள், விண்ணப்பங்களை பதிவு செய்தனர். ஜூன், 7 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை, தேவையான சான்றிதழ்கள், முக்கிய தேதிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை, மாணவர்கள், http://www.tnau.ac.in/ugadmission.html என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.கடந்த எட்டு ஆண்டுகளாக, பிளஸ் 2வில் கணினி அறிவியல் படித்த மாணவர்களுக்கு, வேளாண் படிப்புகளில் சேர முடியாத நிலை இருந்தது. தற்போது, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்துடன் கணினி அறிவியல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என, பல்கலை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.