தேர்தல் முடிவுக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தனிச்சேனல் ஆரம்பிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இன்று அமைச்சர் செங்கோட்டையன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனிச்சேனல் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீன கல்விமுறை பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக கூறினார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே19ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 4 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.


இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் மாணவர்களுக்காக தனிச்சேனல் ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் திட்டம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரும் என்று கூறினார். இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.