கேள்வி கேட்காத மக்கள்.. ஆசையை காசாக்கும் தனியார் பள்ளிகள்... ஒதுக்கப்படும் அரசு பள்ளிகள்

சென்னை: இப்போது மே மாதம் மக்கள் சிறந்த பள்ளியென புகழப்படும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்காக இந்த கட்டுரை..

சிறந்த கல்வி, சிறந்த உள்கட்டமைப்பு உள்ளதாக விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க மக்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.
அதற்காக எந்த கட்டணத்தையும் தர தயாராக இருக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். இதற்கு தனியார் பள்ளிகளின் மார்க்கெட்டிங், மற்றும் மக்களின் மாயை மற்றும் அரசை கண்டுகொள்ளாதது .இவை தான் காரணம்.
சிறந்த கோச்சிங்
என் மகனை அந்த பள்ளியில் சேர்த்தேன், அங்கு கோச்சிங் சரியில்லை, இந்த பள்ளியில் சேர்த்தேன் அங்கும் கோச்சிங் சரியில்ல. ஆனால் அந்த ஸ்கூல்ல போய் சேர்த்தேன் இப்ப சூப்பராக படிக்கிறான் என சொல்வதை கேட்டு இருப்போம். இப்படி சொல்லி சொல்லியே மக்கள் முண்டியடித்து முதல் வரிசையில் சீட்டு போட்டதால் பணக்காரர்கள் படிக்கும் பள்ளிகளாக சில பள்ளிகள் அவதாரம் எடுத்துவிட்டன. அங்கு கட்டணங்கள் நினைத்து பார்க்க முடியாத உயரத்துக்கு போய்விட்டன.
கவலைப்படவில்லை
தனியார் பள்ளிகளை மக்கள் நாடி ஓடுவதை தடுப்பதை பற்றி அரசும் கவலைப்படவில்லை. மக்களும் கவலைப்படவில்லை.காரணம் அரசு பள்ளியில் படிப்பது என்பது கௌரவக்குறைச்சல் என்பது போல் ஆக்கிவிட்டார்கள். மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கிற அவரு புள்ளையே அந்த மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்கிறான். என் பிள்ளைக்கு என்ன குறைச்சல், ஏன் என் மகன் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற அம்மா அல்லது அப்பாக்களின் ஆர்வம் இதற்கு முக்கிய காரணம்.
எதிர்பார்ப்பு
மற்றொரு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், அரசு பள்ளிகளில் இல்லை என்பது தான். அரசு பள்ளிகள் பலவற்றில் கழிவறைகள் எல்லாம்முறையான பராமரிப்பு இல்லாமல், விளையாட்டு வசதிகள் இல்லாமல் இருப்பதை பலர் காரணமாக கூறுகிறார்கள். அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு இப்போது மாறி வருகிறது என்றாலும், தனியார் பள்ளிக்கு நிகராக மாற வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.
சிபிஎஸ்இ
மெட்ரிகுலேசன் அல்லது சிபிஎஸ்இ தரத்தில் உள்ள கல்வியில் படித்தால் தான் ஆங்கில அறிவும், அறிவியல் அறிவும் வளரும் என்ற மக்களின் மாயையை காரணமாக இன்று புற்றீசல் போல் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் உருவெடுத்துவிட்டன. மாணவர்களை கசிக்கி பிழியும் பாடமுறைகள், பள்ளியில் எந்த நேரமும் ஆங்கிலத்தில் பேச சொல்வது இதுதான் சிறந்த கோச்சிங் என மக்கள் நம்புகிறார்கள். குறிப்பாக ஹிந்தி, ஆங்கிலம் உங்கள் பள்ளியில் கட்டாயமா என்று கேட்டுவிட்டே பள்ளியில் பெற்றோர்கள் சேர்க்கிறார்கள்.
தரமான கல்வி
ஆங்கிலத்தில் பேச வேண்டும், இந்தியில் பேச வேண்டும். என்பது மக்கள் ஆசைப்படுவது சரிதான், தினமும் 10 வார்த்தை கற்றாலோ எந்த மொழியையும் ஒரு வருடத்தில் பேசிவிட முடியும். ஆனால் இந்த ஆசையைத்தான் தனியார் பள்ளிகள் காசாக்கி வருகின்றன. முன்பெல்லாம் சாராயம் விற்றவர்கள், பார் நடத்தியவர்கள் இன்று கல்வி தந்தைகளாக வலம் வருகிறார்கள். மக்கள் உண்மையில் தரமான கல்வியை தேடி நாடி ஓட வேண்டியது தனியார் பள்ளிகளை அல்ல. அரசு பள்ளிகளைதான் நாடி ஓடியிருக்க வேண்டும்
அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள்
சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பான கல்வியை கொடு என சட்டையை பிடித்து கேட்க வேண்டியது அரசையும் அரசை நடத்துபவர்களையும் தான்.. அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அரசு நடத்துபவர்களை மக்கள் உலுக்கி இருந்தால் இந்நேரம் ஊருக்கு ஒரு கேந்த்திர வித்யாலயா மாதிரியான பள்ளிகள் உருவாகி இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக மக்களிடம் ஒற்றுமை இல்லாததால், அரசு நடத்த வேண்டிய கல்வி கூடங்களை, அரசை நடத்தும் அரசியல்வாதிகள் மற்றும் தொழில்அதிபர்கள் மெயின் பிசினஸ் ஆக செய்து கொண்டு வலம் கொழித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment