சென்னை : பிளஸ் 1 பொது தேர்வுக்கான விதிகளை, அரசு ஓரளவு தளர்த்தியதால், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு, 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, 91.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது, 8.47 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வில் பங்கேற்று, 7.74 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 73 ஆயிரம் பேர், பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தனர். இவர்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தொடராமல் பாதியில் நின்றனர். 

அதைத் தொடர்ந்து, பிளஸ் 1ல் தோல்வி அடைந்தவர்கள், பிளஸ் 2 படிக்கவும், தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், மாணவர்களின் இடைநிற்றலை சமாளிக்க, தமிழக அரசு, புதிய நடவடிக்கை மேற்கொண்டது. பிளஸ் 1 பொது தேர்வில் பெறும் மதிப்பெண்கள், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழுடன் இணைக்கப்படாது. பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடத்திலும், 35 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றால் போதும் என, அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால், பிளஸ் 1 மாணவர்களும், பெற்றோரும் ஓரளவு நிம்மதி அடைந்தனர். இந்த அறிவிப்பால், மீண்டும், பிளஸ் 1ல் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. 

இந்நிலையில், 2018ம் ஆண்டை போல், இந்த ஆண்டும், பிளஸ் 1 தேர்ச்சி குறைந்து விடக் கூடாது என்பதில், பள்ளிக் கல்வித் துறையும், தேர்வுத் துறையும் அதிக அக்கறை காட்டின. பாடங்களை விரைந்து நடத்தி முடிப்பது, எளிதான வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் திருத்தத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்தே, தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட, 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது.