தமிழகம், நீட் தேர்வு, மாணவர்கள்,உற்சாகம்,

 டாக்டர் மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாடு முழுவதும், நேற்று நடந்து முடிந்தது. 'நீட்' தேர்வு கட்டாயமாகி, மூன்று ஆண்டுகளான நிலையில், முதல் முறையாக, தேர்வு எளிதாக இருந்ததால், மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழக மாணவர்கள் அதிகம் பேர், டாக்டராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நேற்று நாடு முழுவதும், 154 நகரங்களில், 2,500 தேர்வு மையங்களில் நடந்தது. 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்; 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


1.34 லட்சம் பேர்

தமிழகத்தில், 14 நகரங்களில், 188 தேர்வு மையங்களில், 81 ஆயிரத்து, 241 மாணவியர் உட்பட, ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 711 பேர் பங்கேற்றனர். மதியம், 2:00 முதல், 5:00 மணி வரை தேர்வு நடந்தது. பகல், 12:00 மணி முதல், ஆடை, ஆபரண சோதனை செய்யப்பட்டு, மாணவ - மாணவியர், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.சரியாக, பகல், 1:30 மணிக்கு, தேர்வு மைய கதவுகள் அடைக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளை காட்டிலும், இந்த முறை மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஓரளவு விழிப்புணர்வுடன், உரிய நேரத்திற்குள், தேர்வு மையத்துக்கு வந்து விட்டனர்.தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், கன்னடம்,தெலுங்கு, பெங்காலி, அசாமி, குஜராத்தி, மராத்தி என, 10 மொழிகளில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன. இயற்பியல், வேதியியலில், தலா, 45 கேள்விகள்; உயிரியலில், 90 கேள்விகள் என, 180 கேள்விகள் இடம் பெற்றன.


முந்தய அடுத்து ஒவ்வொரு கேள்விக்கும், தலா, நான்கு வீதம், 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. தவறான விடை அளித்தால், 'நெகட்டிவ்' முறையில், ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.எனவே, பெரும்பாலான மாணவர்கள், சரியான பதில் தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே, விடை எழுதியதாக தெரிவித்தனர். தேர்வு முடிந்து மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர்.

இயற்பியல் கடினம்


தமிழில், வினாக்கள் மொழி மாற்றம் செய்ததில், எந்த தவறும் இல்லை. வினாத்தாளை பொறுத்தவரை, இயற்பியல் மட்டும்

கடினமாக இருந்ததாக, ஒரு தரப்பினர்கூறினர். இன்னொரு தரப்பினர், 'ஆண்டு முழுவதும் பயிற்சி எடுத்திருந்தால், தேர்வில், அதிக மதிப்பெண் பெறலாம்' என்றனர். சிலர், இயற்பியல் உட்பட, மூன்று பாடங்களின் கேள்விகளும் எளிதாக இருந்ததாக கூறினர்.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் தேர்வு, 2016ல் கட்டாயமானது. இந்த ஆண்டு, நான்காவது முறையாக, நீட் தேர்வு நடந்தது. இதுவரை நடந்த தேர்வுகளில், வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாக, மாணவர்கள் கூறினர். இந்த முறை தான், வினாக்கள் எளிதாக இருந்ததாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக மாணவர்கள், அதிகம் பேர், டாக்டராகும் வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி!


சில மாணவ - மாணவியர், நீட் தேர்வுக்கு எடுத்த பயிற்சி காரணமாக, தேர்வு பயம் விலகி, எதிர்காலத்தில்,எந்த போட்டி தேர்வையும் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதாக கூறினர்.கடும் கட்டுப்பாடுகள், நெருக்கடிகளுக்கு இடையே, நான்காண்டுகளாக நடத்தப்படும், நீட் தேர்வு, இந்த முறை, தமிழக பெற்றோர் மற்றும் மாணவர்களிடம், நுழைவு தேர்வுகள் குறித்த அச்சத்தையும், தேவையற்ற பதற்றங்களையும் போக்கியுள்ளது. சில அரசியல் கட்சிகளின் பொய் பிரசாரங்களையும், இந்த ஆண்டு, நீட் தேர்வு முறியடித்துள்ளது.


சோதனையில் தடுமாறிய ஊழியர்கள்!போலீஸ் மற்றும் தேர்வு மைய பாதுகாப்பு குழுவின் சோதனைகளுக்கு, மாணவர்கள் ஒத்துழைப்பு அளித்தனர். ஆனால், தேர்வு மைய ஊழியர்கள் மற்றும் போலீசார், 'மெட்டல் டிடெக்டர்' கருவியை சரியாக கையாள தெரியாமல், மாணவ - மாணவியரை, பயங்கரவாதிகளை போல,மீண்டும் மீண்டும் சோதித்தனர். தேர்வு மையத்திற்கு வரும் போது, பெரும்பாலான மாணவ - மாணவியர், தேர்வு குறித்த பயமோ, பதற்றமோ இல்லாமல், ஜாலியாக வந்தனர்; பெற்றோர் பதற்றமாக காணப்பட்டனர்.பெற்றோர் அமர்வதற்காக, தேர்வு மையத்திற்கு வெளியே இடவசதி செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும், எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. உச்சி வெயிலில், சாலையோரம், பெற்றோர் காத்திருந்த அவலம் காணப்பட்டது.

No comments:

Post a Comment