மதுரை:  மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழகத்தில் உள்ள பள்ளி ஆய்வகங்களுக்கு தரம் குறைந்த பொருட்கள் மற்றும் புத்தகங்களை அதிக விலைக்கு வாங்குகின்றனர். அதிகாரிகள் துணையுடன் பெருமளவு முறைகேடு நடக்கிறது. எனவே, தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கடந்த 2018-19ம் கல்வியாண்டில் வாங்கப்பட்ட ஆய்வக பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கவும், இனிவரும் காலங்களில் ஆய்வக பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கு வெளிப்படையான டெண்டர் முறையை பின்பற்ற வேண்டுமெனவும், கடந்த கல்வியாண்டில் நடந்த முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், மனுதாரர் இதே கோரிக்கை குறித்து ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகியுள்ளது. இதை எதிர்த்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த உண்மைகளை மறைத்து மீண்டும் மனு செய்ததால், மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த பணத்தை ஐகோர்ட் கிளையிலுள்ள சித்த மருத்துவ பிரிவிற்கு செலுத்த வேண்டுமென உத்தரவிட்டனர்.