13 மாவட்டங்களில் இன்று வெயில் தாக்கும்

சென்னை : 'தமிழகத்தின், 13 மாவட்டங்களில், இன்று வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும், வெயிலின் தாக்கமும், தண்ணீர் பற்றாக்குறையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மேற்கு பருவமழை துவங்கினாலும், ஒரு வாரம் மட்டுமே, தென் மாவட்டங்களில் பெய்தது. அரபிக் கடலில், 'வாயு' புயல் உருவானதால், தென் மேற்கு பருவமழை நின்று விட்டது. தற்போது வாயு புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, குஜராத்தில் கரை கடந்துள்ளது.

இதையடுத்து, அரபிக் கடலில், தென் மேற்கு பருவகாற்று மீண்டும் வலுவடைவதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இரு தினங்களில் மழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. இன்று, மாநிலத்தின் சில இடங்களில், லேசான வெப்ப சலன மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளது என, வானிலை மையம் கணித்துள்ளது.இதற்கிடையில், மாநிலம் முழுவதும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. 

சென்னை, வேலுார், திருவள்ளூர், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, அரியலுார், பெரம்பலுார், கரூர், திருச்சி ஆகிய, 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று வெப்ப அலைகளின் தாக்கம் கடுமையாக இருக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment